கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தடயங்களை அழித்ததாக மேற்கு வங்க அரசு மீது அம்மாநில எதிர்க்கட்சியான பாஜ குற்றம்சாட்டுகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், முதல்வர் பதவியிலிருந்து மம்தா விலக வேண்டுமென பாஜ அழுத்தம் கொடுக்கிறது. இதற்கிடையே, பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை விரைந்து வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற மேற்கு வங்க சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் மசோதா (மேற்கு வங்க குற்றவியல் சட்ட திருத்தம்) 2024 தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் படி, பலாத்காரத்திற்கு உள்ளான பெண் உயிரிழந்தாலோ, கோமா நிலைக்கு சென்றாலோ குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். அதோடு குற்றவாளிக்கு பரோலில் வர முடியாத ஆயுள் தண்டனையையும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது. இந்த மசோதா குறித்து சட்டப்பேரவையில் முதல்வர்
மம்தா பானர்ஜி நேற்று பேசியதாவது: இந்த மசோதா விரைவான விசாரணை, விரைவான நீதி வழங்கல் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பலாத்காரம் மனிதகுலத்திற்கு எதிரான சாபம். இதுபோன்ற குற்றங்களை தடுக்க சமூக சீர்த்திருத்தம் தேவை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதை உறுதி செய்வதற்காக காவல் துறையில் இருந்து சிறப்பு பணிக்குழு உருவாக்குவோம். இந்த மசோதா மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான சட்டம். இதன் மூலம் தேசிய அளவிலான சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம். உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளன.
அங்கு நடக்கும் பாலியல் விவகாரங்களில் எல்லாம் பாஜ வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? பெண்களை பாதுகாப்பதற்கான வலுவான சட்டங்களை இயற்ற முடியாத பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் அத்தனை பேரும் ராஜினாமா செய்ய வேண்டும். ஒன்றிய பாஜ அரசு பிஎன்எஸ் சட்டத்தை கொண்டு வரும் முன், எங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை. ஒன்றியத்தில் புதிய அரசு அமைந்த பிறகு இது குறித்து விவாதம் நடத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு நீதி கிடைக்கிறது. இந்த மசோதாவில் தாமதமின்றி கையெழுத்திடுமாறு ஆளுநரை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொள்ள வேண்டும். கொல்கத்தா டாக்டர் கொலையில் சிபிஐ நீதியை உறுதி செய்து, குற்றவாளியை தூக்கிலிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.