Monday, February 26, 2024
Home » முன்ஜாமீன் பெற்றவரிடம் காவலில் விசாரணை குஜராத் நீதிபதி, காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: தலைமை செயலருக்கு அவமதிப்பு நோட்டீஸ்

முன்ஜாமீன் பெற்றவரிடம் காவலில் விசாரணை குஜராத் நீதிபதி, காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: தலைமை செயலருக்கு அவமதிப்பு நோட்டீஸ்

by Karthik Yash

புதுடெல்லி: குஜராத்தில் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் துஷார்பாய் ரஜனிகாந்த்பாய் ஷா மீது கடந்த ஜூலை மாதம் மோசடி வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் 8ம் தேதி, ரூ.25,000 உறுதி பிரமாணத்துடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், முன்ஜாமீன் பெற்ற அவரை கடந்த டிசம்பர் 13ம் தேதி காவலில் எடுத்த வெசு காவல் நிலைய போலீசார் டிசம்பர் 16ம் தேதி வரை, 4 நாட்கள் விசாரித்தனர். இதன்போது, புகார்தாரர் முன்னிலையில் அவரை அடித்து, மிரட்டி ரூ.1.65 கோடி பணம் பறித்துள்ளனர்.

இது தொடர்பாக ஷா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிஆர். கவாய் மற்றும் சந்தீப் மேதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘’குஜராத்தில் வேறுபட்ட சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன போலும். இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். நீதிமன்ற உத்தரவை மீறி எப்படி மனுதாரரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தீர்கள்? மனுதாரரை காவலில் எடுக்க விசாரணை அதிகாரிக்கு எங்கிருந்து தைரியம் வந்தது?’’ என்று சராமாரியாக கேள்விகள் கேட்டனர். குஜராத் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெசு காவல்நிலைய சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்று அமர்வில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் மேதா, “இது எதிர்பார்த்தது தான். அந்த 4 நாட்களுக்கு மட்டும் கேமரா செயல்பட்டிருக்காது. இது அதிகார துஷ்பிரயோகம். சாதாரண சிவில் குற்ற வழக்கில் ஏன் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்? அவரிடம் இருந்து கொலைக்கான ஆயுதம் எதுவும் கைப்பற்றப்பட வேண்டியிருந்ததா? இது தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் விதமா? இதில் தொடர்புடைய அனைவரும் தங்களது உடமைகளுடன் வரும் 29ம் தேதி ஆஜராக வேண்டும். அவர்களை சபர்மதி அல்லது வேறு சிறைக்கு அனுப்பவது குறித்து டிஜிபி.க்கு உத்தரவிடப்படும்.

இது சட்ட விரோத ரிமாண்ட் ஆகும். இதனால் நீதிபதி, விசாரணை அதிகாரி 4 நாட்கள் சிறையில் இருக்கட்டும்,’’ என்று கடுங்கோபத்துடன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அரசு தரப்பு ஏஎஸ்ஜி, அதிகாரிகள் தவறு செய்ததை ஒப்புக்கொண்டு அமர்வில் மன்னிப்பு கேட்டார். ஆனால் நீதிபதிகள் மாநில உள்துறையின் கூடுதல் தலைமை செயலர், சூரத் போலீஸ் கமிஷனர், இணை காவல் ஆணையர், வெசு காவல்நிலைய அதிகாரி, கூடுதல் தலைமை விசாரணை நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

You may also like

Leave a Comment

three + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi