புதுடெல்லி: கிரிமினல் வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கிய நபரை கைது செய்து நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குஜராத் போலீஸ் அதிகாரிக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. கிரிமினல் வழக்கு ஒன்றில் துஷார்பாய் ரஜினிகாந்த் பாய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முன்ஜாமீன் வழங்கியது. ஆனாலும், குஜராத்தின் சூரத்தில் உள்ள வெசு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.ஒய்.ராவல், துஷார்பாயை காவலில் எடுத்து விசாரிக்க கீழ் நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். நீதிபதி தீபாபென் சஞ்சய் குமார் தாக்கர், உச்ச நீதிமன்ற உத்தரவை கவனிக்காமல், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்துள்ளார்.
இதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக நீதிபதி மற்றும் இன்ஸ்பெக்டர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட போதிலும், குற்றவாளியாக உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அவர்களின் தண்டனை விவரத்தை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று அறிவித்தது. அப்போது நீதிபதிகள், ‘‘விசாரணையின் போது முன்ஜாமீன் வழங்கப்பட்ட நபரை இன்ஸ்பெக்டர் மிகவும் மோசமாக நடத்தி உள்ளார். அவை பதிவான சிசிடிவி காட்சிகளை திட்டமிட்டு அழித்துள்ளார். அவரது மன்னிப்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. எனவே முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்ததற்காக அவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிபதி தாக்கரின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.