தஞ்சாவூர்: விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பட்டுக்கோட்டை நகராட்சி கமிஷனரின் காரில் பதுக்கியரூ.5 லட்சம் மற்றும் பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் இருந்தும் மொத்தம்ரூ.6.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டிட அனுமதி வழங்க லட்சக்கணக்கில் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது. அதனடிப்படையில் தஞ்சை லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு 9 மணியில் இருந்து நேற்று காலை 7 மணி வரை நடந்தது. அப்போது, பொறியாளர் மனோகரனிடம் இருந்துரூ.84 ஆயிரம், ஒப்பந்ததாரர் எடிசனிடமிருந்துரூ.66 ஆயிரம் என மொத்தம்ரூ.1.50லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், போலீசாரை கண்ட நகராட்சி ஆணையரின் கார் டிரைவர் வெங்கடேசன், நகராட்சி அலுவலகத்தின் சுற்று சுவரில் இருந்து 8,000 ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசினார். இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில்ரூ.5 லட்சத்தை ஆணையர் வீட்டுக்கு எடுத்து செல்ல தனது காரில் அழுக்கு துணியில் மறைத்து வைக்க சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து காரில் அழுக்கு துணிக்குள் இருந்தரூ.5லட்சத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் கணக்கில் வராதவையாகும். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.