அந்தியூர் : அந்தியூர் அருகே அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் பகுதியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு சொந்தமான நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் வட்டாட்சியரிடம் கடந்த ஒரு வருடமாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொளத்தூர்-அந்தியூர் சாலையில், ரெட்டிபாளையத்தில் அரசு பஸ்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையத்திற்கு 10 சென்ட் நிலம் உள்ளதாகவும், அந்த நிலத்தில் 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் வெறும் 7 சென்ட் நிலம் மட்டுமே உள்ளதாகவும், மீதி 3 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றிய பின்பே ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
உடனடியாக வருவாய்த்துறை மூலம் அதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.