மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம் பெண் நர்சிங் படித்துள்ளார். அவருக்கு கடந்த ஒருவாரத்துக்கு முன்பு ஒரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 8 மணியளவில் அவரது வீட்டு பின்புறத்தில் உள்ள ரப்பர் மரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. தற்கொலை செய்தவர் கேரள மாநிலம் கொல்லம் பாருப்பள்ளி புத்தன்வீடு பகுதியை சேர்ந்த ஜெயின் மகன் ஜிதின் (25).
கொல்லத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் அந்த இளம்பெண் நர்சிங் படித்து வந்தார். அங்கு ஜிதினுடைய தாத்தா அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஜிதின் மருத்துவமனையில் தங்கியிருந்து தாத்தாவை கவனித்தபோது அந்த மருத்துவ கல்லூரியில் படித்து வந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஜிதின் தாத்தாவை டிஸ்சார்ஜ் செய்த பிறகும் காதல் தொடர்ந்தது. ஜிதின் சமீபத்தில் இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, இளம்பெண்ணுக்கு அவசர அவசரமாக வேறொரு ஒரு வாலிபருடன் அவரது பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் பெண்ணுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜிதின் நேற்று முன்தினம் இரவு காதலி ஊருக்கு வந்து அவரது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜிதின் தூக்கில் தொங்குவதை பார்த்த காதலி குளியலறையில் இருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் கொண்டு சென்றனர். அங்கு அனிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.