Thursday, June 19, 2025
Home செய்திகள்Banner News அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனை: சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனை: சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி

by Karthik Yash

* 30 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறையில் இருக்க வேண்டும்
* ரூ.90 ஆயிரம் அபராதம்n 11 குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனி தண்டனைகள் அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லை என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், தனது காதலனான 4ம் ஆண்டு மாணவனுடன் தனியாக பேசி கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து மாணவியை மிரட்டி ‘பாலியல் தொந்தரவு’ செய்தார்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, அளித்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளி ஞானசேகரனை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஓரிரு நாளிலேயே இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. போலீஸ் துணை கமிஷனர்கள் சினேக பிரியா, ஐமன் ஜமால், பிருந்தா ஆகிய 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ‘சிறப்பு புலனாய்வு குழு’ ஒன்று நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ஞானசேகரன் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை பெற்றது. பிறகு ஞானசேகரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அதேநேரம் ஞானசேகரன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த அன்று செல்போனில் வேறு யாரிடமாவது பேசினரா, என்பது குறித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்யும் வகையில் ஞானசேகரனை கடந்த பிப்ரவரி 6ம் தேதி தடயவியல் அறிவியல் துறை அலுவலகத்தில் ஆஜர்படுத்தி ஞானசேகரனிடம் 3 மணி நேரம் குரல் மாதிரி சோதனை நடத்தினர். அப்போது கடந்த டிச. 23ம் தேதி மாலை 6.29 மணிக்கு மேல் இரவு 8.52 வரையில் ஞானசேகரன் மாணவியை மிரட்டும் வகையில் செல்போனை ‘பிளைட் மோடில்’ தான் வைத்திருந்தது அறிவியல் பூர்வமான ஆய்வு மூலம் உறுதியானது என்று தடயவியல் அறிவியல் துறை அறிக்கை அளித்தது.

அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவி, அவரது காதலன் உள்பட 24 பேர் அளித்த வாக்குமூலம் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையின் மூலம் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட 60 நாட்களில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பாலியல் தொடர்பான வழக்கில் தங்களது முழு விசாரணையை நடத்தி முடித்து, பிப்ரவரி 24ம் தேதி 100 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி தள்ளுபடி செய்து அன்றைய தினமே குற்றச்சாட்டு பதிவு செய்தது. அதில், 329 அத்துமீறி நுழைதல், 64 (1) பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 11 பிரிவுகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு கடந்த ஏப்ரல் 23ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். சுமார் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஞானசேகரன் குற்றவாளி என்று கடந்த 28ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரன் மீது வைக்கப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 11 குற்றச்சாட்டுகளுக்கான தண்டனையை தனித்தனியாக அறிவித்தார். அதன்படி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு இல்லை என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராஜலட்சுமி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். 11 குற்றச்சாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஞானசேகரன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்று அனைத்து ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை மிக வேகமாகவும், துல்லியமாகவும் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்த சிறப்பு விசாரணை குழுவுக்கும், இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜராகி வாதித்த சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் மேரி ஜெயந்திக்கும் இந்த நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட பிறகு ஞானசேகரனை போலீசார் நீதிமன்றத்திற்கு வெளியே அமர வைத்தனர். அதன் பிறகு அவரிடம் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அவரை போலீசார் புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். நீதிபதி அளித்த 207 பக்க தீர்ப்பில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கென்று நீண்ட நெடிய வரலாறு உள்ளது. இந்த வளாகத்தில் தான் கிண்டி பொறியில் கல்லூரி உள்ளது. உலகளவில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் தனிப்பட்ட நற்பெயரையும் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இந்த வளாகத்துக்குள் படிக்கும் மாணவர்களில் 97 சதவீதம் பேர் முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது ஆவணங்களை பார்க்கும் போது தெரிகிறது.

பல்வேறு கனவுகளுடன் உரிய கல்வி தகுதியுடன் வந்த மாணவியை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன், பல்கலைக்கழகம் மட்டும் அல்ல ஒட்டு மொத்த சமூகத்தையும் அவமதிப்பு செய்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது. கடந்த 2010 முதல் தற்போது வரை 37 குற்ற வழக்குகள் ஞானசேகரன் மீது பதியப்பட்டுள்ளது. இதில் 5 வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில வழக்குகளில் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பல வழக்குகள் இன்னும் விசாரணை நிலையில் உள்ளது.

இதே போன்ற தன்மையுடைய வழக்குகளில் ஏற்கனவே ஞானசேகரன் ஈடுபட்டு அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவொரு கருணையும் காட்ட முடியாது. எனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ஞானசேகரன், ‘சார்’ என்ற வார்த்தையை பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றும் நோக்கில், தானும் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி திசைதிருப்பவும், மிரட்டவும் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதை காவல்துறையும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் ஞானசேகரனை தவிர வேறு எந்த நபரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்படவில்லை என்று இந்த நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது.
அதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை கசியவிட்ட காரணத்துக்காக அப்பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த நீதிமன்றமும் அபராதத்தொகை ரூ. 90 ஆயிரத்தை அப்பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. தவிர கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனை தவிர வேறு எந்த நபரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்மந்தப்படவில்லை என்று இந்த நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது.

வழங்கப்பட்ட தண்டனை விவரம்
1. 329 அத்துமீறி நுழைதல் 3 மாதம் சிறை.
2. 126 (2) சட்ட விரோதமாக பாதிக்கப்பட்டவரை தடுத்து நிறுத்துதல் ஒரு மாதம்.
3. 87 வலுக்கட்டாயமாக கடத்துதல் 10 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
4. 127 (2) சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் ஓராண்டு சிறை.
5. 75 (2) -வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு 3 ஆண்டுகள்
6. 76 தாக்குதல் 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்.
7. 64 (1) பாலியல் பலாத்காரம் 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லை என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம்.
8. 351 (3) கொலை மிரட்டல் விடுத்தல் 7 ஆண்டு சிறை ரூ.10 ஆயிரம் அபராதம்.
9. 238(B) ஆதாரங்களை அழித்தல் 3 ஆண்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்.
10. 66(E) IT Act. தனிநபர் அந்தரங்கங்களை மீறுதல் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம்.
11. வன்கொடுமை தடுப்பு சட்டம் தண்டனை இல்லை.
இந்த தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராத தொகை ரூ.90 ஆயிரம் விதிப்பு.

* இனி யார் அந்த சார் என்றால் நீதிமன்ற அவமதிப்பு
நீதிமன்ற வளாகத்தில் அரசுத் தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியதாவது: ஞானசேகரன் பின்புலத்தில் யாரும் இல்லை. சம்பவம் நடந்த போது அவரது செல்போன் ‘பிளைட் மோடில்’ இருந்தது தடயவில் அறிவியல் துறை நிபுணர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டுவதற்காகவே ‘தானும் அண்ணாபல்கலைக்கழக ஊழியர் தான் என ஏமாற்றும் வகையில் ‘பிளைட் மோடில்’ இருந்த செல்போனில் பேசுவது போல் ஞானசேகரன் ஏமாற்றியுள்ளார். அவரது போனுக்கு சம்பவத்தின் போது எந்த அழைப்பும் வரவில்லை என செல்போன் சேவை நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை நிறுவனத்தின் நோடல் அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியாகவும் அளித்திருக்கிறார். ஞானசேகரன் செல்போனுக்கு சம்பவத்தன்று மாலை 6.29க்கு அழைப்பு வந்துள்ளது. அதன் பிறகு இரவு 8.52 மணிக்கு தான் அவருக்கு முதல் எஸ்எம்எஸ் வருகிறது. அதுவும் மிஸ்டு கால் அழைப்பு தொடர்பான எஸ்எம்எஸ் ஆகும். எனவே மிரட்டும் வகையில் தான் அவர் போனில் பேசியிருக்கிறார். ஞானசேகரனுக்கு அழைப்பு எதுவும் வரவில்லை என்பதை பாதிக்கப்பட்ட பெண்ணே உறுதி செய்திருக்கிறார்.

ஒரு வேளை இத்தனை ஆதாரங்களையும் தாண்டி, இந்த சம்பவத்தில் மற்றொருவருக்கு தொடர்பு இருக்கலாம் என நீதிமன்றத்துக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால், மற்றொரு நபரையும் குற்றவாளி என்று வழக்கில் சேர்த்து தண்டனை வழங்கி இருக்கலாம். இந்த வழக்கில் யாரும் பிறழ் சாட்சியாகவில்லை. ஆனால் சிறப்பு புலனாய்வு குழு அளித்த ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளது. எனவே, இனியும் ‘யார் அந்த சார்’ என்று கேள்வி எழுப்புவது நீதிமன்ற அவமதிப்புதான் என்று கூறினார்.

* சென்னை போலீஸ் விசாரணையை உறுதிப்படுத்திய நீதிமன்றம்
அண்ணாபல்கலைக்கழக மாணவி, தான் பாதிக்கப்பட்டதாக அவசர அழைப்பு எண் 100க்கு போன் செய்து பேசியுள்ளார். உடனே, கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப்படையினர் பெண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, தனக்கு தேர்வு இருப்பதால் மாலை 4 மணிக்கு மேல் விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். அதுவரை காத்திருக்காமல், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், பெண்களிடம் தவறாக ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து விசாரித்தனர்.

அதில் 2 பேர் பற்றி விசாரித்தபோது ஞானசேகரன், கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியதும், போலீசார் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இரவில் அவருடைய செல்போனை ஆய்வு செய்த போலீசார் அதில் மாணவியுடன் இருப்பதுபோன்ற வீடியோ இருந்ததை கண்டுபிடித்தனர். அதிகாலையில் அவனை கைது செய்தனர். அதாவது புகார் வந்த 24 மணிக்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். புகாரில் அந்தப் பெண் சொன்ன தகவலை அப்படியே சேர்த்தனர். இந்த வழக்கை எதிர்க்கட்சிகள் திசைதிருப்பின.

இதனால் புகார் கொடுத்த 2 நாளில் வழக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது. ஆனால் கோட்டூர்புரம் போலீசார் என்ன விசாரணை நடத்தினார்களோ, அதே விசாரணையைத்தான் தனிப்படையாலும் செய்ய முடிந்தது. நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியது. இதனால், சிறப்பாக செயல்பட்ட கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையிலான போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் பாராட்டுகள் குவித்த வண்ணம் உள்ளன. அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi