சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விபரங்கள் வரும் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், தனது காதலனான 4ம் ஆண்டு மாணவனுடன் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து, மாணவனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை மிரட்டி ‘பாலியல் தொந்தரவு’ செய்தார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, மறுநாள் தனக்கு நடந்த சம்பவத்தை அவசர காவல் கட்டுப்பாட்டு எண் 100 உதவியுடன் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளி ஞானசேகரனை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேநேரம் இந்த வழக்கில் தொழில்நுட்ப பிரச்னையால் எப்ஐஆர் வெளியாகியது.
அந்த எப்ஐஆரில், குற்றவாளி ஞானசேகரன் செல்போனில் ஒருவரிடம் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் யாருடன் போனில் பேசினான், ‘யார் அந்த சார்’ என்று கூறி தொடர் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதனால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த 24 மணி நேரத்தில் அறிவியல் பூர்வ ஆய்வின் அடிப்படையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மாணவியை மிரட்டுவதற்காக தனது செல்போனில் ‘பிளைட் மோடில்’ வைத்து உனக்கு டிசி தர வைப்பேன் என்றும் பேசியுள்ளார். இந்த வழக்கில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் மூலம் ஞானசேகரன் ஒருவன் மட்டும் தான் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கமிஷனர் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றம், புகார் கொடுத்த ஓரிரு நாட்களிலேயே இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது சென்னை போலீஸ் கமிஷனர் அரசிடம் முன் அனுமதி பெற்று பேட்டி அளித்தாரா என பல கேள்விகளை முன் வைத்து, காவல் துறை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேநேரம் ஞானசேகரன் மீது சென்னை காவல்துறை கடந்த ஜனவரி 5ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது.
மேலும், இந்த வழக்கை விசாரணை நடத்த, சினேக பிரியா, ஐமன் ஜமால், பிருந்தா ஆகிய 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ‘சிறப்பு புலனாய்வு குழு’ ஒன்று நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது அதை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள உயர் அதிகாரி, அதை கட்டுப்படுத்த பேட்டி அளிக்கலாம் என்றும், இதற்காக அரசிடம் முன் அனுமதி பெற தேவையில்லை என்று கூறி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து மாணவி பாலியல் வழக்கு தெடர்பான ஆவணங்களை பெற்றனர். பிறகு ஞானசேகரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி, வழக்கு தொடர்பாக லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், ஞானசேகரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அதேநேரம் ஞானசேகரன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த அன்று செல்போனில் பேசினரா, என்பது குறித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்யும் வகையில் ஞானசேகரனை கடந்த பிப்ரவரி 6ம் தேதி தடயவியல் அறிவியல் துறை அலுவலகத்தில் ஆஜர்படுத்தில், துணை இயக்குநர் சோபியா, உதவி இயக்குநர் நளினி நடராஜன், தொழில்நுட்ப பிரிவு அதிகாரி லட்சுமி நாராயணன் ஆகியோர் ஞானசேகரனிடம் 3 மணி நேரம் குரல் மாதிரி சோதனை நடத்தினர். பிறகு அதற்கான அறிக்கையும் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, மாணவியின் பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஞானசேகரன், பாதிக்கப்பட்ட மாணவி, அவரது காதலன் உள்பட 24 பேர் அளித்த வாக்குமூலம் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையின் மூலம் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட 60 நாட்களில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பாலியல் தொடர்பாக வழக்கில் தங்களது முழு விசாரணையை நடத்தி முடித்து, பிப்ரவரி 24ம் தேதி 100 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
பாலியல் வழக்கு என்பதால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த தகவல்களும் அப்போது வெளிவிடவில்லை. அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி தள்ளுபடி செய்து அன்றைய தினமே குற்றச்சாட்டு பதிவு செய்தது.
அதில், பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல், அந்தரங்க புகைப்படம் எடுத்து வெளியிட்டது, பெண் வன்கொடுமை செய்தது, தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது. இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு கடந்த ஏப்ரல் 23ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.
தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். சுமார் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றஞ்சாட்டுகளை நிரூபிக்க அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளது என்று வாதிட்டார். குற்றச்சாட்டப்பட்ட ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை மாணவி பாலியல் வழக்கில் மே 28ல் தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரனை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு அழைத்து வரப்பட்டார். பிறகு அவர் நீதிபதி ராஜலட்சுமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ராஜலட்சுமி இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
இதை தொடர்ந்து தண்டனை குறித்து ஞானசேகரனிடம் நீதிபதி கேட்டபோது, அதற்கு ஞானசேகரன் தனக்கு தந்தை இல்லை, வயதான தாய் மற்றும் 8 வயதில் மகள் இருக்கிறார் என்றும், தனது தொழிலிலுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார். அப்போது, சிறப்பு அரசு வழக்கறிஞர், ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை, மிரட்டல் போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் குற்றவாளி ஈடுபட்டுள்ளார்.
இதுபோன்ற வழக்குகளை அரிதிலும் அரிதானதாக கருத வேண்டும். எனவே, இதற்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்களை கொடுத்தார். அப்போது ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர், அவர் தொழில் ரீதியாக அதிக கடன் வாங்கியிருக்கிறார். அவருக்கு அதிக பட்ச தண்டனை வழங்கினால் கடன்காரர்கள் அவரின் குடும்பத்தினரை துன்புறுத்துவார்கள் என்றார்.
இதை கேட்ட நீதிபதி, குறைந்த தண்டனை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஏதாவது இருந்தால் தாக்கல் செய்யுங்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை விபரம் ஜூன் 2 ம் தேதி அறிவிக்கப்படும் அதுவரை குற்றவாளியை காவலில் வைக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பலத்தபாதுகாப்புடன் ஞானசேகரன், புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
* எந்தெந்த பிரிவுகளின்கீழ் தண்டனை
பிஎன்எஸ் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் ஞானசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
* 329 அத்துமீறி நுழைதல்
* 126 (2) சட்ட விரோதமாக பாதிக்கப்பட்டவரை தடுத்து நிறுத்துதல்
* 87 வலுக்கட்டாயமாக கடத்துதல்
* 127 (2) சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்
* 75 (2) 75 (i), (ii), (iii) பாலியல் தொந்தரவு
* 76 தாக்குதல்
* 64 (1) பாலியல் பலாத்காரம்
* 351 (3) கொலை மிரட்டல் விடுத்தல்
* 238(B) ஆதாரங்களை அழித்தல்
* 66(E) IT Act. தனிநபர் அந்தரங்கங்களை மீறுதல்
* 4 தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 11 பிரிவுகள்.