சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிக்கு நேற்று முன்தினம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் கல்லூரி வளாகத்தில் சக்தி வாய்ந்த வெடி குண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறியிருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பொறியியல் கல்லூரி ஊழியர்கள் உடனே கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் பொறியியல் கல்லூரி முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என தெரியவந்தது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடந்த 10 நாட்களில் 2வது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.