`நச்’னு இருக்கும் நாசி கோரங்
இந்திய உணவுகள் உலக அளவில் பிரபலம். இங்கு கிடைக்கும் உணவுகள் அனைத்தும் பாரம்பரிய முக்கியத்துவம் கொண்டவை என்பதே அதற்கு காரணம். பல உணவுகள் சங்க காலத்தில் இருந்து இப்போது வரை மக்களால் ருசிக்கப்படுகிறது. இதுபோன்ற பாரம்பரியம் மலேசிய உணவுகளுக்கும் இருக்கிறது. இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருக்கிற உணவுகள் அனைத்தும் உலகம் முழுவதும் பரவலாக சாப்பிடப்படுவதற்கு காரணம் அந்தந்த உணவின் தனிச்சுவையும், தனித்தன்மையும்தான். இதில் மலேசிய உணவுகள் இந்திய மக்களால் பெருமளவில் சாப்பிடப்படு கிறது. சென்னையில் மலேசிய உணவுகளை சாப்பிட வேண்டுமென்றால் அண்ணாநகர் சாந்தி காலனியில் இயங்கும் ‘அபாங் ராஜூ நாசி கோரங்’ உணவகம் நல்ல சாய்ஸ். மலேசியாவில் இருந்து மூலப்பொருட்கள் வாங்கி சமைக்கப்படுவதால் சுவையாகவும், தரமாகவும் இருக்கிறது. இந்த உணவகத்தின் உரிமையாளர் கிருஷ்ணா ராஜூவை சந்தித்தோம்.“பூர்வீகம் சென்னையாக இருந்தாலும் இருபது வருடங்களாக சிங்கப்பூரில்தான் இருந்தேன். படித்தது ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்பதால் கேட்டரிங் சார்ந்தே சிங்கப்பூரில் வேலை பார்த்தேன்.
இப்படி இருக்கும்போதுதான் கொரானா வந்தது. அதனால் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்தேன். கொரானா காலம் என்பதால் மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல முடியவில்லை. அதே நேரத்தில் பார்த்து வந்த வேலையும் இல்லாமல் போனது. இதனால் இங்கேயே ஏதாவது உணவு சார்ந்த தொழில் செய்யலாமென நானும், என் மனைவியும் யோசித்தோம். சென்னையில் பல இடங்களில் பிரியாணியில் இருந்து உள்ளூர் உணவுகள் வரை அனைத்துமே கிடைக்கிறது. அதனால் புதிதாக ஏதாவது உணவகம் தொடங்க வேண்டுமென முடிவெடுத்தோம். சிங்கப் பூரில் கிடைக்கும் உணவுகளை எனது வீட்டில் அடிக்கடி என் மனைவி சமைத்துக் கொண்டிருப்பார். அப்போதுதான் எங்களுக்கு யோசனை வந்தது. சிங்கப்பூர் உணவுகளை மையமாக வைத்து சென்னையில் ஒரு உணவகம் தொடங்கலாமென. அப்படித்தான் இந்த உணவகத்தைத் தொடங்கினோம். சிங்கப்பூருக்கென்று தனியான உணவுகளென்று ஏதும் கிடையாது. அங்கு கிடைக்கும் உணவுகள் அனைத்துமே மலேசிய உணவுகள்தான். மலேசிய உணவுகளில் பெரும்பாலும் ப்ரைடு ரைஸ் வெரைட்டிகள் அதிகமாக இருக்கும். அவைதான் சிங்கப்பூரிலும் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் ப்ரைடு ரைஸ் சைனீஸ் வகையை சார்ந்தது கிடையாது. அந்த நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்தும், அங்கு கிடைக்கிற கடல் உணவுகளை வைத்தும் தயாரிக்கப் படுகிற ப்ரைடு ரைஸ்கள்.
அங்கு கிடைக்கிற ப்ரைடு ரைஸ்கள் பரவலாக நாசி கோரங் என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது. இந்த நாசி கோரங்கிலையே பல வகையான வெரைட்டிகள் இருக்கின்றன. சிக்கன், மட்டனில் தொடங்கி கருவாடு வரை நாசி கோரங் இருக்கிறது. அங்கு பரவலான மக்களால் சாப்பிடப்படுகிற உணவுகளில் இதுதான் முதன்மையாகவும் இருக்கிறது. பலர் வீடுகளிலும் கூட சமைத்து சாப்பிடுகிறார்கள். அந்தளவு மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் பிரசித்திபெற்ற இந்த உணவைத்தான் சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறோம். மலேசியா, சிங்கப்பூர் மக்கள் பெரும்பாலும் அவர்களின் உணவில் இனிப்பு அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். நமது ஊரில் எப்படி காரமாக இருந்தால் அனைவருக்கும் பிடிக்குமோ அதேமாதிரி அங்கு இனிப்புச் சுவையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால், அங்கு சாப்பிடக்கூடிய இனிப்புசுவை அதிகமாக இருக்கிற உணவுகளை நம்ம ஊரில் கொடுக்க முடியாது. அப்படிக்கொடுத்தால் இங்கு இருக்கிறவர்கள் சாப்பிடவும் மாட்டார்கள். அதனால் நம்ம ஊர் மக்களுக்கு பிடிக்கிற சுவையில் கொஞ்சம் காரமாக மலேசிய உணவுகளை தயாரித்துக் கொடுக்கிறோம்.
மலேசியாவில் இந்த நாசி கோரங் செய்வதற்கு ஜாஸ்மின் என்கிற அரிசியைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், அந்த அரிசி நமது நாட்டில் வாங்குவதற்கு ஒரு கிலோவுக்கு ரூ.2000 வரை செலவாகும். அதனால் அந்த ஜாஸ்மின் அரிசிக்கு இணையான சுவையை தரக்கூடிய சீரகச்சம்பா அரிசியில்தான் நாசிகோரங் தயார் செய்கிறோம். சீரகச் சம்பா அரிசியில் ப்ரைடு ரைஸ் கொடுக்கிற ஒரே உணவகம் எங்கள் உணவகம் மட்டும்தான். இந்த நாசி கோரங் தயாரிப்பதற்கு முக்கியமான பொருள் சம்பல். அதாவது, ட்ரை பிரான் எனப்படும் கருவாடாக மாறிய இறால்கள் மற்றும் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுவதுதான் சம்பல். இந்த சம்பல்தான் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கும் பல உணவுகளுக்கு மூலப்பொருள். இந்த மூலப்பொருளைக்கூட வீட்டில் தான் தயாரிக்கிறோம். நாசி கோரங் சம்பலில் சிக்கன், மட்டன், இறால், கருவாடு என அனைத்தும் தயாரிக்கலாம். மலேசி யாவில் ஸ்பெஷலான நாசி கோரங் சம்பல் என்றால் அது இகாபில்லிஸ் தான். இகாபில்லிஸ் என்றால் நெத்திலி கருவாடு. அந்த நெத்திலி கருவாட்டிலும் கூட நாசி கோரங் சம்பல் செய்யலாம்.
ஆனால், நமது ஊரில் கிடைக்கும் கருவாட்டைக் கொண்டு இந்த டிஷ் செய்ய முடியாது. அதற்குக் காரணம் இங்கு கிடைக்கும் கருவாடுகள் மண்ணாகவும், வீச்சம் தரக்கூடியதாகவும் இருக்கும். அதனால் இந்த உணவுகளை தயாரிப்பதற்காக மசாலாவில் இருந்து ப்ரான், கருவாடு வரை வெளிநாட்டில் இருந்துதான் வரவைக்கிறோம். இந்த சம்பலை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிற நாசி கோரங் போலவே, பியாசா, டாம்யும் என பல வெரைட்டி களில் இந்த உணவுகளைத் தயாரிக்கலாம். இந்த உணவுகள் அனைத்தையும் நமது ஊரில் விற்பனை செய்வதுதான் சிரமம். இருந்தாலும் மலேசிய உணவுகளை இப்போது நிறையபேர் சாப்பிட வருகிறார்கள். சென்னை மக்களுக்கும் இந்த உணவுகள் பெருமளவில் பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து வருகிற வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் வேறுவேறு உணவினை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். நம்ம ஊரில் கிடைக்கும் அரிசி குழம்பு சாதத்தைப் போல அங்கேயும் சில அரிசி குழம்பு உணவுகள் இருக்கின்றன. அதில் ரொம்ப ஸ்பெஷலான உணவுகள்தான் நாசி கண்டர் மற்றும் ஹைனானீஸ் சிக்கன் சோறு.
அரிசி, குழம்பு, பொரியல் என நம்ம வீடுகளில் சாப்பிடப்படுகிற உணவுகளைப் போலவே மலேசியாவில் சாப்பிடக்கூடிய வீட்டு உணவுகள். நாசி கண்டர் என்றால் மீன் அல்லது ஏதாவது கடல் உணவோடு சேர்ந்து சாப்பிடக்கூடிய சாப்பாடு. அதேபோல, சிக்கன், மட்டனிலும் இருக்கிறது. இந்த உணவுகள் எங்கள் உணவகத்தில் வார இறுதி களில் கிடைக்கும். மாலை 3:30 மணிக்கு தொடங்கி இரவு 3:30 வரை செயல்படுகிற இந்த உணவகத்திற்கு உணவுப்பிரியர்களில் இருந்து சினிமா பிரபலங்கள் வரை அனைவருமே வருகிறார்கள். சென்னைக்கு சுற்றுலாவிற்காக வந்திருக்கிற மலேசியா, சிங்கப்பூர் மக்கள் கூட நமது உணவகத்திற்கு வருகிறார்கள்.
மலேசிய உணவுகளில் ரைஸ் உணவுகள் மட்டுமல்லாமல் அங்கு கிடைக்கும் ஸ்ட்ரீட் உணவுகள்கூட கொடுத்து வருகிறோம். நம்ம ஊரில் தயாரிக்கப்படுகிற கொத்துப் புரோட்டாவை சிங்கப்பூர் மசாலாவில், சிங்கப்பூர் மாவில் செய்து கொடுக்கிறோம். அதிலும் சிக்கன், மட்டன், ப்ரான் என அனைத்து வெரைட்டியிலும் கொடுக்கிறோம். மலேசியாவில் கிடைக்கும் நூடுல்ஸ் இங்கு கிடைக்கும். இவை அனைத்துமே காம்போ பேக்கில் கொடுத்துவருகிறோம். பெரும்பாலும் கடைக்கு வருபவர்கள் காம்போ பேக் தான் ஆர்டர் செய்கிறார்கள். காம்போ பேக்கில் மலேசிய ஸ்டைல் சிக்கன், நாசி கோரங் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு மலேசியாவில் கிடைக்கும் மில்க் மைலோவையும் குடிக்கிறார்கள். சுவையிலும், தரத்திலும் அனைவரும் விரும்பும் வகையிலும் உணவுகளை கொடுத்து வருவதால்தான் கடந்த மூன்று வருடங்களாக இந்த உணவகத்தை சிக்கல் இல்லாமல் நடத்த முடிகிறது’’ என்கிறார் கிருஷ்ணா ராஜூ.
– ச.விவேக்
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி