அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை வில்லிவாக்கம் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடை, பலூன் கடை, பேன்சி ஸ்டோர் மற்றும் சூப்பர் மார்க்கெட், பிரியாணி கடை, டீக்கடை என ஏராளமான கடைகள் வைத்துள்ளனர். இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்துசெல்லும் நிலைமை ஏற்பட்டதால் விபத்துக்கள் நடைபெற்றுவந்தன. இதனால் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று 8வது மண்டல மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தபோது நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது தெரிந்தது.
இதையடுத்து அண்ணாநகர் 2வது அவென்யூ பகுதியில் உள்ள சுமார் 120 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அண்ணா நகர் டவர் பார்க் அருகே 80க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அமைந்தகரை திருவிக. பார்க் அருகே 50 கடைகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய பகுதிகளில், ‘’இனிமேல் கடைகளை அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ நோட்டீஸ் வழங்கினர். அத்துடன் கடைகளுக்கு 50ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து மாநகாரட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘’ அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம் மற்றும் வில்லிவாக்கம், கீழ்பாக்கம் புரசைவாக்கம் பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டு இருந்தால் அந்த பகுதி உதவி பொறியாளரிடம் புகார் அளிக்க வேண்டும். மாநகாரட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவார்கள்’ என்றனர். ‘’மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அப்போது கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தபோதும் மாநகாரட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியுள்ளனர். இதுபோல் அரும்பாக்கம், வில்லிவாக்கம், கீழ்பாக்கம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்’ என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.