சென்னை: சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபி,ஐ விசாரணைக்கு கடந்த 11ம் தேதி தடை விதித்தது.
மேலும் தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், அதற்கு தமிழ்நாட்டில் பணிபுரியும் வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியலை சுருக்கமான விவரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் வழக்கை விசாரிக்க இருக்கும் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை நீதிபதிகள் முன்னிலையில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை சி.பி.ஐ அமைப்பிடம் ஒப்படைத்தால் 4 அல்லது 5 ஆண்டுகள் வரை கால தாமதம் ஆகும். எனவே காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் ஆகியோர்களை வைத்து விசாரணை நடத்தலாம். குறிப்பாக இதற்காக டி.ஐ.ஜி சுரேஷ் குமார் தாக்கூர் (இணை ஆணையர் கிழக்கு மண்டலம்) அவரது தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுகிறது. மேலும் ஐமன் ஜமால் ஐபிஎஸ் (துணை ஆணையர் சட்டம் ஒழுங்கு ஆவடி சரகம்), பிருந்தா ஐ.பி.எஸ் (துணை ஆணையர் சேலம் மாநகரம் வடக்கு) ஆகிய அதிகாரிகளும் இடம்பெறுவார்கள். மேலும் இந்த குழுவில் தமிழ்நாடு கேடரை சேர்ந்த மற்றும் தமிழ்நாட்டை சாராத 2 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
இந்த சிறப்பு புலனாய்வு குழு தினந்தோறும் விசாரணையை நடத்த வேண்டும். அதனை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் .சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய தகுதியான அமர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அமர்வு முன்பு சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை நிலை அறிக்கையை வாரம் ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும். இதைத்தவிர இந்த வழக்கு செலவுக்காக ரூ.50 ஆயிரத்தையும், மேலும் இதர செலவுக்காக ரூ.25ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
* அன்புமணிக்கு அறிவுறுத்தல்…
சிறுமி பாலியல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தபோது நீதிபதிகள் முன்னிலையில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஒரு தகவலை தெரிவித்தார். அதில், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை, தமிழ்நாட்டில் மூத்த அரசியல்வாதியாக இருக்கும் அன்புமணி கடுமையான முறையில் விமர்சித்து பதிவிட்டிருந்தார். எனவே அதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டுமென்று தெரிவித்தார். இதையடுத்து அதனை கேட்ட நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் இதுபோன்ற தேவையற்ற கருத்துகளை தவிர்த்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.