அண்ணாநகர்: அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை வில்லிவாக்கம் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடை, பலூன் கடை, பேன்சி ஸ்டோர் மற்றும் பிரியாணி, டீக்கடை என ஏராளமான கடைகள் வைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் சாலையில் நடந்துசெல்லும் நிலைமை ஏற்பட்டதால் விபத்துக்கள் நடைபெற்று வந்தன. எனவே, நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று அண்ணாநகர் மண்டல அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து, அண்ணாநகர் 2வது அவென்யூ பகுதியில் 120 கடைகள், அண்ணாநகர் டவர் பார்க் அருகே 80 கடைகளை, அமைந்தகரை திருவிக பார்க் அருகே 50 கடைகள் என 250 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று அகற்றினர்.மேலும், இனிமேல் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைக்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, விதிமீறிய கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.