சென்னை: சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் காயமடைந்த 6 பேரில் இருவர் உயிரிழந்தனர். அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ பிரதான சாலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மதுபோதையில் இருந்தவர் ஒட்டி வந்த கார் மோதியதில் 6பேர் காயமடைந்தனர்.விபத்து குறித்து தகவலின் பேரில் வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்றுவரும் 6 பேரில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
காரில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் தப்பிச் சென்ற நிலையில் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என்று தெரிவித்தனர். விபத்திற்குள்ளான காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் விஜய் யாதவ், பல்பொருள் அங்காடி காவலாளி நாகசுந்தரம் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் 4 பேருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.