திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (28ம் தேதி) அதிகாலை 4.02 மணிக்கு தொடங்கி, 29ம் தேதி அதிகாலை 2.24 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில், ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. அன்னாபிகேஷம் நடைபெறுவதை முன்னிட்டு, நாளை மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்து உள்ளது. சுவாமிக்கு அன்னம் சாத்தும் நேரத்தில் பக்தர்களை தரிசிக்க அனுமதிப்பது மரபு இல்லை என்பதனால் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.