சென்னை: விசிக தலைவர் உயர் கல்வி துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். சென்னை, தலைமை செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன்,, தலைமை செயலாளர், நகராட்சி துறை செயலாளர் கார்த்திகேயன், உயர் கல்வி துறை செயலாள் சமயமூர்த்தி ஆகியோரை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 48 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் கல்வி துறை அமைச்சர்அழைப்பின் பேரில் இன்றைக்கு அண்ணாமலை பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
ஏறத்தாழ 1 மணி நேரத்துக்கு மேலாக கூட்டமைப்பின் கோரிக்கைகளை அமைச்சர் கோவி செழியன் பணிவோடு கேட்டறிந்தார். ஒன்றிரண்டு கோரிக்கைகளை தவிர பல கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ஆவண செய்யப்படும் என்ற உறுதியை வழங்கி இருக்கிறார். குறிப்பாக ஓய்வூதியர்களுக்கான கோரிக்கைகள், அயல் பணிக்கு சென்றிருப்பவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பண பயன்கள் ஆகியவை குறித்து விரிவாக பேசினோம். அவர்கள் அனைவரையும் அரசு அவரவர் பணியிடங்களில் பணியாற்ற வேண்டும் என்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தோம்.
அது அரசின் கொள்கை முடிவு. அதுகுறித்து முதல்வரோடும், தொடர்புடைய அமைச்சகத்தோடும், நிதித்துறை செயலாளரோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும். ஆகவே எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்ற கருத்தை அமைச்சர் கூறினார். ஒன்றிரண்டு கோரிக்கை தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வேலை செய்யும் இடத்திலே மீண்டும் பணி என்பது உள்ளிட்ட மற்ற கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்தார். அதனையொட்டி அண்ணாமலை பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அமைச்சரிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.