சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து 78 தொகுதிகளை பெறவேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் வகையில் அதிமுக 2 தொகுதியில் போட்டியிட்டால் பாஜக ஒரு இடத்தில் போட்டியிடவேண்டும் என்ற வகையில் தொகுதிகளை பிரிக்க வேண்டும். ஒரு சில சட்டமன்ற தேர்தலில் பாஜக 2ம்இடம் வந்தது. அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 19.4 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தது. பாஜக கூட்டணி 11.4 சதவீத ஓட்டுக்கள் பெற்றது. அதிமுக-பாஜக பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெறவேண்டும்’ என அந்த கடிதத்தில கூறியுள்ளார். இதன்படி பாஜக 78 தொகுதிகளை கேட்கிறது.
இவரது கடிதம் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்கும் செயலாக இருப்பதாகவும், அவர் மீது பாஜக உடனடியாக நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆதரவாளரும், அதிமுக வக்கீலுமான மணிகண்டன் கூறியதாவது: அண்ணாமலையின் முக்கிய நோக்கமே, பாஜக அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி உடைய முக்கிய காரணமே அண்ணாமலைதான். வானத்தை வில்லாக வளைப்பேன் என பிரதமர் மோடியிடம் பேசினார். இவரது பொய்யான பேச்சை நம்பிய டெல்லி தலைமை, தனியாக போட்டியிட வைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.
மத்தியில் ஆட்சி அமைப்பதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் குறைந்தது 15 இடங்களை வென்றிருக்கலாம். இதன்பின்னரே இவரை அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் புரிந்து கொண்டதுடன், பாஜக மாநில தலைவர் பதவியை பறித்தனர். சமீபத்தில் மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அண்ணாமலையை அமித்ஷா கடுமையாக எச்சரிக்கை செய்தார். இதையும் மீறி அதிமுக கூட்டணியை உடைக்க முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளார். கூட்டணி குறித்து பேசுவதற்கு அவர் தேர்தல் பொறுப்பாளர் அல்லர். 31 தேசிய ெபாதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தான்.
பாஜகவின் மாநில தலைவர்களில் யார் வீட்டிலாவது வருமானவரித்துறை சோதனை நடத்தியது இல்லை. ஆனால் அண்ணாமலையின் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அவரை பாஜக மேலிடம் கட்டம் கட்டி வைத்துள்ளது. அவரது நோக்கம் அதிமுகவுடன் கூட்டணி சேரக்கூடாது, தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டும். அதிமுகவை அழிக்க வேண்டும் என்பது தான். பாஜகவையும் தமிழ்நாட்டில் கால்ஊன்ற விடகூடாது என்பதுதான். இதற்கான வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார். உடனடியாக பாஜக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.