Saturday, April 20, 2024
Home » கூட்டணி அமையவில்லை என்ற விரக்தியில் பாஜ மேலிடம் கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி மோதல்: தொகுதி பட்டியல் வெளியாவது தாமதமாவதால் தொண்டர்கள் விரக்தி

கூட்டணி அமையவில்லை என்ற விரக்தியில் பாஜ மேலிடம் கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி மோதல்: தொகுதி பட்டியல் வெளியாவது தாமதமாவதால் தொண்டர்கள் விரக்தி

by Ranjith

சென்னை: பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. திட்டப்படி எல்லாம் நிறைவேறியதால், தனி அணி அமைப்பதில் அண்ணாமலை தீவிரம் காட்டினார். ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்தால்தான் கணிசமாக ஓட்டுக்களை பெற முடியும் என்று மேலிடம் கருதியது. இதற்காக கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு வந்தனர். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் மூலம் பேசி வந்தனர்.

கூட்டணிக்கு வராவிட்டால் பல முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்ல நேரிடம் என்றெல்லாம் மிரட்டிப் பார்த்தனர். ஆனால் இந்த மிரட்டலுக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து செல்லவில்லை. இந்தநிலையில் இரு நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜ தலைமையிடம் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தலா 3 பேர் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளார். அதில் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் 3 பேரில் இருந்து ஒருவரை மேலிடம் தேர்வு செய்து அறிவிக்கலாம் என்றார்.

இந்தப் பட்டியலை அமித்ஷாவிடம் சென்று கொடுக்கும்படி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அமித்ஷாவோ, அண்ணாமலையை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. ஒரு மாநிலத்தில் உள்ள கூட்டணியையே காலி செய்து விட்டீர்கள் என்று சத்தம்போட்டுள்ளார். பட்டியலையும் தூக்கி எறிந்துள்ளார். அதன்பின்னர் நட்டாவிடம் பட்டியலைக் கொடுத்து விட்டு சென்னை திரும்பி விட்டார் அண்ணாமலை.

அந்தப் பட்டியலில் கோவை தொகுதிக்கு தனது பெயரை சேர்த்துள்ளார். இது தெரிந்ததும் வானதி சீனிவாசன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப்போகிறேன் என்றவர், ஏன் திடீரென்று போட்டியிட விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலை, நீங்கள் எம்எல்ஏவாக உள்ளீர்கள். மகளிர் அணியின் தேசிய தலைவராகவும் உள்ளீர்கள். அதனால் எம்பி தேர்தலில் நான் நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

நமது கட்சியில் எம்பி, எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் கவர்னர், ஒன்றிய அமைச்சர், மாநில அமைச்சர் என மாறி மாறி செல்வது இயற்கைதானே. நெல்லையிலும் நயினார் நாகேந்திரன்தானே போட்டியிடுகிறார். அப்படி இருக்கும்போது நான் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. உங்களுக்கு தொகுதி வேண்டும் என்றால், உங்கள் சொந்த ஊரான கரூரில்தானே நிற்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் அண்ணாமலையோ, செந்தில்பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் நிற்க முடியாது.

கோவையில் நின்றால் நல்லது என்று நினைக்கிறார். அதேநேரத்தில், அண்ணாமலை நின்றால், மாவட்டச் செயலாளர் மூலம் கீழ் மட்ட நிர்வாகிகள் வரை அவருடைய ஆட்களை கொண்டு வந்து போடுவார். இதனால் தனக்கு ஆதரவாளர்கள் இல்லாத நிலை ஏற்படும் என்று வானதி அஞ்சுகிறார். இதனால் தனக்குதான் சீட் வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறார். இதற்காக மோடியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். கோவை சீட் வேண்டும், அமித்ஷாவின் கோபத்தை தணிக்க வேண்டும் என்று ஈஷா யோகா குருவை நேற்று அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.

அதேநேரத்தில், தமிழக பட்டியலை தற்போது வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்த மேலிடம், அதிமுக கூட்டணிக்கு ஓரிரு நாள் வரை தொடர்ந்து முயற்சி செய்ய முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் யாரும் போட்டியிட விருப்பம் காட்டாததால் கேட்கும் சிலருக்கு வழங்க அண்ணாமாலை முடிவு செய்து அதற்கான பட்டியலை கொடுத்துள்ளார் என்கின்றனர் பாஜ நிர்வாகிகள். பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

* ஜெயலலிதாவை மோடி புகழ்ந்த அன்றே தாக்கிய அண்ணாமலை
பிரதமர் மோடி கடந்த மாதம் 25ம் தேதி திருப்பூருக்கு வந்தார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை புகழந்தார். ஆனால், அன்று காலையில் வெளியான ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, தமிழகத்தில் லஞ்ச ஊழல் அதிகரித்த ஆட்சி ஜெயலலிதாவினுடையதுதான். இது குறித்து நான் சொன்ன கருத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜ கூட்டணிக்காக பேச வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம், அண்ணாமலைக்கும் நமக்கும்தான் பிரச்னை. அவரை மாற்ற வேண்டும் என்று ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து முறையிட்டோம். ஆனால் அவரை மாற்றவோ, தட்டி வைக்கவோ முயற்சிக்கவில்லை. இனி அவர்களிடம் சேர்ந்தால், அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை வராது. கட்சி காணாமல் போய்விடும். இதனால் என் முடிவில் மாற்றமில்லை என்று கூறிவிட்டாராம். இதனால், பாஜ மேலிடம், இந்த மாத இறுதியில் கோவைக்கு வரும் பிரதமர் முன்பு சில முன்னாள் அமைச்சர்களை மேடை ஏற்ற மீண்டும் வேலைகளை தொடங்கிவிட்டார்களாம் பாஜவினர்.

You may also like

Leave a Comment

6 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi