சென்னை: தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு, தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு தற்குறி என்று அண்ணாமலை சமீபத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார். பழனிசாமியும், அண்ணாமலையை விமர்சித்து பதில் அளித்தார். இதுகுறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசையிடம் சென்னையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய தமிழிசை, அண்ணாமலைக்கு அறிவுரைகள் வழங்கி பதில் அளித்தார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது: அவரவருக்கு என்று மேடை பேச்சில் ஒரு பாணி இருக்கும். அது அவரது பாணி என்றே கருதுகிறேன். அவர் தமிழக பாஜவின் தலைவர். அவரிடம் தான் இதைப் பற்றி கேட்க வேண்டும். என்னை பொறுத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த மரியாதையை கொடுக்க வேண்டும். தலைவர்களை பற்றி பேசும் போது வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்பதே எனது கருத்து. மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஆனால் கடும் சொற்கள் கூடாது. ஒரு மேடையில் பேசியதை மட்டுமே வைத்து அவரை பற்றி எதுவும் பேசிவிட முடியாது. ஏனென்றால் எனது அனுபவம் வேறு, அவரது அனுபவம் வேறு. எனவே, அவரது கருத்துகளை ஆழமாக சொல்கிறார். இப்போது நான் ஒரு சாதாரண காரிய கர்த்தாதான். எனவே, அவரது கருத்தை பற்றி நான் இப்போது பேச முடியாது. பிற்காலத்தில் இதுபற்றி விவாதங்கள் வரும்போது பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.