மன்னார்குடி: மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், மேல பணங்காட்டாங்குடியை சேர்ந்தவர் சிவக்குமார் (49).டிவி மெக்கானிக். இவர் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் மாற்று மதத்தினர் மனம் புண்படும்படி அவதூறாக சித்தரித்தும், பொது மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதத்திலும் அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
இது குறித்து கூத்தாநல்லூர் போலீசில் முகமது சமீம் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிவக்குமாரின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்தனர்.இதையடுத்து சிவக்குமாரை நேற்று மதியம் கைது செய்து, மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.