சேலம்: இருமதத்தினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகுமாறு சேலம் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் திரும்ப வந்துவிட்டது. சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை யூடியூப் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக்கூடாது என கிறிஸ்தவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளன என்று ஒரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து ‘அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டர் மூலமாக அரசுக்கு கடிதம் அனுப்பினார். இந்த மனுவை விசாரித்த அரசு, வழக்கு பதிவு செய்வதற்கான காரணங்கள் இருக்கிறது. எனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம்’ என அனுமதி வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கில் டிசம்பர் 2ம் தேதி சேலம் நீதிமன்றதில் ஆஜராகுமாறு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு கடந்த 6ம்தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சம்மன் சென்றது. ஆனால் சம்மன் திரும்ப வந்துவிட்டது. இதுகுறித்து வழக்கு தொடர்ந்த பியூஸ் கூறுகையில், ‘நீதிமன்றத்தில் இருந்து சென்ற சம்மனை வாங்காமல் அண்ணாமலை திரும்ப அனுப்பிவிட்டதால் அவருக்கு பயம் வந்துவிட்டது. இதுகுறித்து வரும் 2ம்தேதி கோர்ட்டில் எனது வழக்கறிஞர் மூலமாக பிடிவாரண்ட் பெற நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.