Wednesday, April 24, 2024
Home » தேர்தல் நேரத்தில் பாமக கடைவிரித்து ஏலம் விடுவார்கள்: விடிய விடிய நம்முடன் கூட்டணி பேசி விட்டு, விடிந்தபின் ஆட்டுக்குட்டியுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள்; சி.வி.சண்முகம் டார்…டார்…

தேர்தல் நேரத்தில் பாமக கடைவிரித்து ஏலம் விடுவார்கள்: விடிய விடிய நம்முடன் கூட்டணி பேசி விட்டு, விடிந்தபின் ஆட்டுக்குட்டியுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள்; சி.வி.சண்முகம் டார்…டார்…

by Karthik Yash

விழுப்புரத்தில் நேற்று நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி பேசியதாவது: கடந்த தேர்தலில் கூட்டணி அமைப்பதில் நாம் தவறு செய்து விட்டோம். ஆனால் இந்த முறை அவர்களே நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய தேர்தலில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி. பாமக தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது ஒன்றும் புதிதல்ல. தற்போது தேசியமும், தமிழ் நலனும் என்று பேசுகிறார்கள். தேசியம் இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா?. தற்போது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாரை எதிர்த்து பேசினாலும், கருத்து சொன்னாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பாமக கூட்டணி அமைந்தபோது பல எதிர்ப்புகளை மீறி அவர்கள் கொள்கைகளை, கோரிக்கைகளை நாம் ஏற்று செயல்பட்டோம். தேர்தல் நேரத்தில் கடைவிரித்து ஏலம் விடுவார்கள். விடிய, விடிய நம்முடன் கூட்டணி பேசி விட்டு, விடிந்தபிறகு ஆட்டுக்குட்டியை வரவழைத்து ஒப்பந்தம் போடுகிறார்கள். யாருடன் கூட்டணி வைத்தாலும் நமக்கு கவலை இல்லை. பாஜ ஆட்சியில் தமிழகத்தில் ஒரு தொழிற்சாலையாவது தொடங்கினார்களா? ஒருவருக்காவது வேலை கிடைத்ததா? அண்ணாமலை இதற்கு பதில் சொல்வாரா?. என்எல்சியை மூடக்கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் இப்போது பாஜவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். என்எல்சியில் தேர்வு செய்யப்பட்ட ஆயிரம் பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் கிடையாது. மூன்றாவது சுரங்கத்தை நிரந்தரமாக மூடுவதற்கும், நிறுத்தவதற்கும் நடவடிக்கை எடுப்பாரா. குறைந்தபட்சம் மோடி ஆதரவுடன் வாக்குறுதியாவது கொடுப்பாரா?. அன்புமணி ராமதாசுக்கு இதனை சொல்ல தைரியம் இருக்கிறதா?. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் தான் இந்த மக்களவைத் தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.

* கட்சி, ஆட்சியை உடைக்கும் மோடி மஸ்தான் பருப்பு இங்கே எடுபடாது…
சி.வி.சண்முகம் கூறுகையில், ‘வாயை திறந்தாலே பொய், பித்தலாட்டம். பிரதமர் மோடி நாட்டுக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழகத்திற்கு கூஜா தான். சென்னை முதல் குமரி வரை நடந்தே சென்றாலும், 100 முறை தமிழகத்திற்கு வந்தாலும் இங்கு அவர்களால் காலூன்ற முடியாது.அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐயுடன் கூட்டணி வைத்து பாஜ தேர்தலை சந்திக்கிறது. நண்பர்களாக இருந்த பாஜ நம்மை அழிக்க நினைக்கிறது. நம்முடன் துணை நின்றவர்கள் துரோகிகளாக மாறிவிட்டார்கள். துரோகிகளின் திட்டங்கள், சதிகளை தவிடு பொடியாக்க வேண்டும். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து, கட்சியை உடைத்த பாஜவால் நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசியல் சாணக்கியர் சரத்பவார் துவக்கிய கட்சியை பிளவுபடுத்திய பாஜ, நம் கட்சியில் வலிமைமிக்க தொண்டர்கள் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மோடி மஸ்தான் சூழ்ச்சிகள் தமிழகத்தில் மட்டும் எடுபடவில்லை. மோடி மஸ்தான் பருப்பு இங்கே எடுபடாது. சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியும். பாஜவுடன் இருந்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் நமக்கு கிடைக்கவில்லை’ என்றார்.

* ஓட்டு கேட்கும் நிர்வாகிகளுக்கு அதிமுக, பாஜ ‘இரவு பார்ட்டி’
கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு கட்சியினர் ஓட்டு சேகரிக்க தேர்தல் அலுவலகங்களை திறந்து பூத் கமிட்டி அமைத்து ஓட்டு சேகரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வீதி, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தந்து ஓட்டு கேட்க செல்போன் எண் பெறப்பட்டு வருகிறது. சில பூத் கமிட்டிகளில் வாக்காளர்களை கவர பரிசு பொருட்கள், வேட்டி, சேலைகள், சில கடைகளில் பொருட்களை வாங்க டோக்கன் போன்றவை பெறப்பட்டிருப்பதாக தெரிகிறது. பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் கட்சி அலுவலகங்களில் சோதனைக்கு செல்ல தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

கட்சி வார்டு அலுவலகங்களில் விதிமுறை மீறி ஓட்டு கேட்க சிலரை பயன்படுத்தி பணம் பட்டுவாடா, உணவு பொருட்கள் வினியோகம் செய்து வருவதாக தெரிகிறது. இரவு நேரங்களில் ஆலோசனை கூட்டம் என வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்களை அழைத்து பார்ட்டி தந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். பறக்கும் படையினர், இன்னும் பிரசாரம் நடக்கவில்லை, அப்போது தான் சோதனைக்கு செல்வோம் என கட்சி அலுவலகங்களை சோதனையிட தயக்கம் காட்டி வருகின்றனர். அதிமுக, பாஜக அலுவலகங்களில் காலை, மாலை நேரங்களில் நிர்வாகிகள், பூத் ஏஜெண்டுகள் கூட்டம், அதற்காக செலவிடப்படும் தொகை விவரங்கள் கணக்கிடப்படவில்லை. முறையாக பறக்கும் படையினர் கண்காணிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

* அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாஜ நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்
பாஜ தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளராக இருந்தவர் செல்வ பிரபு. இவர் நேற்று பாஜவில் இருந்து விலகி கோவை இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டார். கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரித்து வந்த இவர் திடீரென பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பாஜவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

20 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi