புதுக்கோட்டை: அண்ணாமலை போல் நான் அரசியல் செய்ய மாட்டேன். திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி நாங்கள் எந்த குறையும் கூறவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவதற்கான பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. குற்றப்பத்திரிகை தெளிவில்லாமல் இருக்கிறது. தெளிவுபடுத்த வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பு. திமுக – காங்கிரஸ் கூட்டணி பற்றி நாங்கள் எந்த குறையும் கூறவில்லை. அப்படி இருக்கையில் முதலமைச்சர் எங்களை பார்த்து ஏன் குறை சொல்ல வேண்டும்.
மதுரைக்கு வரும் 8ம் தேதி உள்துறை அமைச்சர் வருகிறார். நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் உள்ளனர். திமுக கூட்டணிக்கு தேமுதிகவை செல்வப் பெருந்தகை அழைத்துள்ளார். இது குறித்து அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அண்ணாமலை அதிரடியான அணுகுமுறையை கையாண்டார். நான் அமைதியான அரசியல் செய்ய விரும்புகிறேன்.
தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம். ஆனால் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும்.
அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார். தமிழ் 5000 வருடத்திற்கு முன்பானது என்பதை யாரும் மறுப்பதற்கு கிடையாது. ஆனால் அதற்காக மற்றொரு மொழி சிறுமை என்று கூற முடியாது. அனைத்து மொழியுமே உயர்ந்தது. அமலாக்கத்துறை என்பது தனித்துறை. மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது வழக்கமான நடைமுறையில் நிர்வாக ரீதியான மாற்றம் ஒன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.