ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் அண்ணாமலை பாதயாத்திரையின்போது அனுமதியின்றி பிளக்ஸ் வைத்தவர்கள் மற்றும் விஏஓவை அவதூறாக பேசிய பாஜ நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்னும் பாதயாத்திரையை கடந்த ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் துவக்கினார். 30ம் தேதி காலை முதுகுளத்தூரில் பாதயாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு அண்ணாமலை வருவதற்கு தாமதமானதால், பாஜவினர் பஸ்களை செல்லவிடாமல் தடுத்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்தனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அனுமதியின்றி பட்டாசும் வெடித்தனர். இதுகுறித்து மேலமுதுகுளத்தூர் விஏஓ ராஜேஸ்வரன் கேட்டதற்கு அவரை, பாஜவினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், பாஜ ஒன்றிய தலைவர் கபிலன், முதுகுளத்தூர் நகர தலைவர் பாலமுருகன், மாவட்ட நிர்வாகி இளையராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, கடந்த ஜூலை 29ம் தேதி ராமநாதபுரத்தில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டபோது வழிவிடு முருகன் கோயில் முதல் அரண்மனை வரை பாஜவினர் வாகனங்களை நிறுத்தியும், மின்கம்பங்களில் கட்சிக்கொடியை கட்டியும், நீதிமன்ற உத்தரவை மீறி பிளக்ஸ் போர்டுகள் வைத்தும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். புகாரின்பேரில், ராமநாதபுரம் பாஜ நகர தலைவர் கார்த்திகேயன் மீது, ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.