சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை படிப்பதற்காக லண்டன் சென்றுள்ளதை அடுத்து, தமிழக பாஜவை நிர்வகிக்க மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக கடந்த 28ம் தேதி அதிகாலை லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அவர் அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து படிப்பை மேற்கொள்ள உள்ளார். படிப்பை முடித்து கொண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை லண்டன் பயணத்தை வைத்து அவரது தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இல்லாத பட்சத்தில் பொறுப்பு தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் பரபரப்பு இருந்தது. இதனால் பதவியை பிடிக்க பாஜவில் கடும் போட்டி நிலவி வந்தது. தலைவர் பதவிக்கான ரேஸில் சட்டப்பேரவை பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், நடிகை குஷ்பு என பட்டியல் நீண்டு கொண்டே போனது. இதற்காக டெல்லி மேலிடத்தை சில தலைவர்கள் அணுகி வந்தனர்.
ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. புதிய தலைவரோ அல்லது பொறுப்பு தலைவரோ நியமிக்கப்படவில்லை. மாறாக பாஜவின் பணிகளை நிர்வகிக்க ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பு குழுவை டெல்லி மேலிடம் நேற்று அதிரடியாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜ தேசிய செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு கல்வி பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்கிறார்.
மாநிலத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதலின்படி குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் ஒருங்கிணைப்பாளராக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா நியமிக்கப்படுகிறார். குழுவின் உறுப்பினர்களாக மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்தக் குழு, மாநில உயர்நிலைக் குழுவோடு கலந்தாலோசித்து கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக பாஜவில் அதிரடிக்கு பெயர் போனவர் எச்.ராஜா. எந்த நிகழ்வானாலும் தடாலடியாக பேட்டி அளிக்கக் கூடியவர்.
தனது பேட்டியால் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழக பாஜவில் எந்த பொறுப்பும் இல்லாமல் இருந்து வருகிறார். கவர்னர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். அந்த பதவியும் கிடைக்கவில்லை. இதனால், கடந்த சில மாதங்களாக கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை சற்று சமாதானப்படுத்த ஒருங்கிணைப்பாளர் பதவியை டெல்லி மேலிடம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
* ‘அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்துவோம்’
பாஜ மூத்த தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான எச்.ராஜா தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டியில்,‘‘பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக 3 மாதங்கள் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால், தமிழக பாஜவை வழிநடத்த அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஒருங்கிணைப்பாளராக என்னை தேசிய தலைமை நியமித்துள்ளது. பிரதமர் மோடிக்கும், தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி.
தலைமை எதிர்பார்க்கும் வகையில், தமிழகத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து, இந்த குழு தமிழகத்தில் கட்சியை வழிநடத்தும்’ என்றார். இதற்கிடையில், பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சமூகவலைதள பதிவில், “தமிழக பாஜவை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு என் வாழ்த்துகள். இணைந்து பணியாற்றுவோம், சாதனை படைப்போம். பிரதமர் மோடி காட்டிய வழியில் தமிழகத்தை மீட்டெடுப்போம்’ என பதிவிட்டுள்ளார்.