
சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறப்பான முறையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் வாயிலாக 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மதுரையில் அதிமுக சார்பில் வரும் ஆக., 20ம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த செயற்குழுவில் அதிமுகவை வலுப்படுத்தும் ஆலோசனைகள் மேற்கொண்டோம்.
இனி செயற்குழு கொடுத்த அதிகாரத்தின் படி பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு முடிவையும் அறிவிப்பார். மேலும், என்னை பொறுத்தவரை, 50 வருடங்களாக அரசியலில் பயணித்துள்ளேன். ஆனால், வெறும் 2 வருட அரசியல் ஞானத்தை கொண்டுள்ள பாஜ தலைவர் அண்ணாமலையை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என அழைக்கலாம். எனவே, அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை. பாஜ தலைவர் அண்ணாமலை என்ன பேயா… பிசாசா… அவரைப் பார்த்து நாங்கள் பயப்படுவதற்கு. அதிமுக யாரையும் பார்த்து பயப்படாது. மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போல் நடக்கவிருக்கும் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் நிலை கண்டிப்பாக வரும். இவ்வாறு அவர் கூறினார்.