சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு, பாஜவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமோ, அமைப்பு ரீதியான தொடர்பு எதுவுமே இல்லாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அபத்தமாக பேசி வருகிறார். அதிமுக உதயமான பிறகு 1977ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 1980 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றது. 1984 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 26 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி பெற்றது. இதை போலவே, திமுக கூட்டணியில் 2019, 2024 தேர்தல்களில் போட்டியிட்டு சுயமரியாதையோடு தொகுதி பங்கீடு நடைபெற்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இதுதான் தமிழக தேர்தல் களத்தின் யதார்த்த நிலை. பாஜவுக்கு எந்த தேர்தலிலாவது, எந்த கூட்டணியிலாவது காங்கிரஸ் பெற்றதை போல மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 27 தொகுதிகளிலும் போட்டியிட்டு 27 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற சரித்திரம் உண்டா? தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கிற பாஜவில் அண்ணாமலை தலைவராகி விட்டார். கடந்த காலத்தில் திராவிட இயக்கங்களோடு காங்கிரஸ் கூட்டணி வைத்த போது சுயமரியாதையோடுதான் நடத்தப்பட்டதே தவிர, பாஜவை போன்று என்றைக்குமே அடிமைகளாக இருந்ததில்லை. எனவே, அண்ணாமலை, நாவை அடக்கி கொள்ள வேண்டும். நீங்களாக உங்களை திருத்தி கொள்ளவில்லை என்றால் மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன்.