சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை புகார் எதிரொலியாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லியில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இரு நாட்களுக்கு முன்னர் திடீரென்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது தேசிய தலைவர் நட்டாவும் கலந்துகொண்டார். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் எல்லாமே அவருக்கு எதிராகவே திரும்பி விடுகிறது.
குறிப்பாக, பேரவையில் தமிழக அரசு கொடுத்த அறிக்கையை படிக்காமல் மாற்றிப் படித்ததால், அதை நீக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னரை வைத்துக்கொண்டே சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதை பார்த்ததும் பாதியிலேயே அவர் திரும்பி விட்டார். இதனால் மக்களிடம் கெட்ட பெயர் வந்தது. அதன்பின்னர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல் இருந்தது, பல்வேறு தீர்மானங்கள் மீது முடிவு எடுக்காமல் இருந்தது, சனாதனம் குறித்து பேசியவர், ஆர்.டி.ஐயில் கேட்டபோது தனக்கு தெரியாது என்று பதில் அளித்ததால் ஏற்பட்ட பரபரப்பு, கடைசியில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடர்ந்து சறுக்கியதால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக தலையிட வேண்டிய சூழல் வந்தது.
இவ்வாறு தமிழக அரசியலில் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சொதப்பி வருவதால் ஒன்றிய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. ஆளுநரை ஒன்றிய அரசுதான் இயக்கி வருகிறது என்பதை மக்கள் ஆழமாக நம்பி விட்டனர். அதை மாற்றுவது கடினம். மற்ற மாநிலங்களைப்போல இல்லாமல் தமிழக மக்கள் படித்தவர்கள். பகுத்தறியும் அறிவைப் பெற்றவர்கள். இதனால், ஆளுநரின் பேச்சில் உள்ள உண்மையை கண்டறிந்து விடுகின்றனர். அவரது ஒவ்வொரு செயல்களும் மக்களிடம் எடுபடாமல் போய் விடுகிறது. இதனால் தமிழக பாஜவின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. நாங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் கை கூடுவதில்லை.
அதற்கு ஆளுநரின் செயல் முட்டுக்கட்டையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின்பேரில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நேற்று காலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக ஆளுநரின் செயல் குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புக்கு பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உள்துறை அமைச்சருடன் நடந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.