சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்டதா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுக்கு ஆதரவு அளித்தது. இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மீது பாஜகவுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்து வருகிறது. ஏனென்றால் எந்த நேரத்திலும் அவர்கள் காலை வாரி விட்டு சென்று விடுவார்கள் என்ற பயம் பாஜகவிடம் இருந்து வருகிறது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் சில தொகுதிகளை வெற்றி பெற்று இருக்கலாம். அப்படி அவர்கள் வெற்றி பெற்று இருந்தால் நமக்கு நம்பிக்கையாக இருந்து இருப்பார்கள். நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று டெல்லி பாஜக மேலிடம் கருதி வருகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான் காரணம் என்று மேலிடம் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணியை முறிக்க முக்கிய காரணமே அண்ணாமலையின் தேவையில்லாத வாய் பேச்சு தான். கட்சியின் பெயரை தாங்கியிருக்கக்கூடிய அண்ணாவையும், ஜெயலலிதா போன்ற தலைவர்களை அவதூறாக பேசியதால் தான் அதிமுக கூட்டணியை முறித்தது என்றும், டெல்லி மேலிடம் கடும் கோபத்தில் இருந்து வருகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி, பாமக, தமாகா, அமமுக, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தும் தோல்வியை தான் சந்திக்க நேரிட்டது. 21 தொகுதிகளில் ெடபாசிட் பறி போனது தான் மிச்சம். மற்ற தொகுதிகளில் தான் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் டெபாசிட் பெற முடிந்தது. பாஜக தனித்து கூட போட்டியிடவில்லை. இவ்வளவு பெரிய கூட்டணி, செல்வாக்கு உள்ள பாமக மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்களை இணைத்தும் தோல்வியை சந்தித்தது பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டு வந்தது. இதனை நிருபிக்கும் வகையில் மக்களவை தேர்தல் தோல்விக்கு கூட்டணி தொடர்பாக அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான் என்று தமிழக பாஜக தலைவர்களே வெளிப்படையாக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இது வேறு சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து தமிழகத்தில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தார். மேலும் வௌிநாடு சென்று படிக்க விண்ணப்பிக்க போவதாகவும் அண்ணாமலை அப்போது தெரிவித்தார். இந்த மாதம் இறுதியில் லண்டனுக்கு படிப்பதற்காக செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றார். டெல்லியில் கடந்த 1, 2ம் தேதி முகாமிட்டு இருந்த அண்ணாமலை பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக அப்பாயிண்மெண்ட் கேட்டார். இரண்டு பேரும் அண்ணாமலையை சந்தித்த அப்பாயிண்மெண்ட் வழங்கவில்லை. இதனால், அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். கடைசியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மட்டும் சந்தித்து நான் ஏற்கனவே அளித்துள்ள என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அப்போது வலியுறுத்தினார். மேலும் படிப்புக்காக வெளிநாடு செல்ல போகிறேன். படிப்பு முடிந்து வந்த பின்னர் என்ன பதவி வழங்கினாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். பதவி வழங்காவிட்டாலும் தொண்டனாக கூட இருக்கிறேன் என்றும் அப்போது அண்ணாமலை கூறியுள்ளார். அதற்கு ஜே.பி.நட்டா, மோடி, அமித்ஷாவிடம் பேசி விட்டு முடிவை சொல்வதாக அறிவித்தார். இதற்கிடையில் அண்ணாமலை பாஜக அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பி.எல்.சந்தோஷ், ஜே.பி.நட்டாவிடம் பேசினார். அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கலாம். தேசிய அளவில் ஏதாவது ஒரு பொறுப்பு வழங்கி, எந்த மாநிலத்திற்காகாவது பொறுப்பாளராக நியமிக்கலாம். ஒரு தேர்தல் தோல்வியால் அவரை இழந்து விட வேண்டாம். இளைஞராக இருக்கிறார், துடிப்பாக இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கேட்ட ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் பேசி முடிவு செய்வோம் என்றும் அப்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. எந்த முடிவும் எட்டப்படாததால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதையடுத்து அண்ணாமலை வெளிநாட்டிற்கு படிப்புக்கு செல்வதற்கான பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார். அதே நேரத்தில் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை ஓரிரு நாளில் விடுவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டால், அடுத்து புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் இருந்து தான் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றவர்கள் கட்சியில் பெரிய பொறுப்புக்கு வந்துள்ளனர். எனவே, தொடர்ச்சியாக கொங்கு மண்டலத்திற்கு பொறுப்பு வழங்க வேண்டாம். இந்த முறை தென்மாவட்டத்தில் இருந்து தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்மாவட்டத்தில் உள்ள பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஏற்கனவே தலைவர்களாக இருந்து விட்டனர்.
அவர்கள் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை. அதே நேரத்தில் சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை தலைவராக நியமிக்கலாமா? என்ற பேச்சு அடிப்பட்டு வருகிறது. அவருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் முழு ஆதரவு கொடுத்துள்ளார். மேலும் பாஜக வெளிநாட்டுப் பிரிவு துணைத் தலைவராக உள்ள தென்காசியை சேர்ந்த ஆனந்தன் பெயரும் தலைவர் பதவிக்கு அடிப்பட்டு வருகிறது. அவருக்கும் சில தலைவர்கள் ஆதரவு இருந்து வருகிறது. இதற்கிடையில் நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இருந்து வந்தவர். அவருடனான உறவை அதிமுகவில் உள்ளவர்கள் விரும்ப வாய்ப்பில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் 4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சிக்கியுள்ளார். அவருடைய கட்சிக்காரர்களே அவரை காட்டி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இதனால், 4 கோடி விவகாரத்தில் எந்த நேரத்திலும் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. அப்படியிருக்கும் ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கக்கூடாது என்று ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாஜக தலைவர் பதவியை பிடிக்கும் ரேஸில் நிறைய பேர் தங்களுக்கு வேண்டியப்பட்ட தலைவர்களை நாட தொடங்கியுள்ளனர். இதனால் புதிய பாஜக தலைவராக யாரை நியமிக்க போகிறார்கள் என்ற பரபரப்பு நிலவியுள்ளது.