சென்னை: கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பாக நடந்த கருத்தரங்கில் பாஜ தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இங்கு எதை செய்தாலும் அரசியலாக பார்க்கப்படுகிறது. 5 முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாங்கள் சிந்தாந்த ரீதியாக எதிரும்புதிருமாக தான் இருக்கிறோம். கலைஞர் நாணய வெளியீடு நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.
நாணய வெளியீடு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அரசியலை கலப்பது வேதனை அளிக்கிறது. எம்.ஜி.ஆருக்கு உரிய மரியாதையை கூட்டணியில் இல்லாத போதும் பாஜக அரசு 2017ல் செய்தது. அதே போல 2024ல் கலைஞருக்கு மரியாதை கொடுத்துள்ளோம். கலைஞர் உடல் நலக்குறைவில் இருந்த போது மோடி அவரை டெல்லிக்கு அழைத்தார், அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ராஜ்நாத் சிங் கலைஞருக்கு முழு மரியாதை செய்ய வேண்டும் என எண்ணி நினைவிடம் சென்றார்.
ஆட்சியில் இருக்கும் போது, மத்தியில் உறவு வைத்து தமிழகத்திற்கு நிதியயை பெற்று கொண்டு மாநில அரசு செய்ததாக காட்டி கொண்டார் எடப்பாடி. ஜெயலலிதாவிற்கு விழா எடுக்க வேண்டும் என்றால் முதல் ஆளாக பாஜ இருக்கும். டீ பார்ட்டிக்கு சென்றால்தான், நாணய வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருவார் என கூறுவது அரசியல் புரிதலில் எடப்பாடி பழனிசாமி கிணற்று தவளையாக உள்ளதை காட்டுகிறது. இன்னும் நிறைய அரசியல் முதிர்வை எடப்பாடியிடம் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.