திருப்புவனம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை 2026ல் அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது என்றும், எடப்பாடி பழனிசாமி குறித்தும் சில நாட்களுக்குமுன் கருத்து தெரிவித்திருந்தார். இது அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக பேசினால், அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவினர் கருப்புக்கொடி காட்டுவோம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.