ஓமலூர்: உழைக்காமல் பொய் பேசி பதவிக்கு வந்தவர் அண்ணாமலை. மற்ற கட்சிகளின் அடையாளத்தில் வெற்றி பெற்று ஆடுபவர்கள் பாஜவினர் என்று எடப்பாடி பழனிசாமி சரமாரியாக தாக்கி பேசி உள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவின் போது, அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது, எம்ஜிஆரின் நாணயத்தை வெளியிட்டேன். அதைப்பற்றி சிறுமைப்படுத்தி பாஜ மாநில தலைவர் பேசியுள்ளார். மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் வந்து வெளியிட்டால் தான், எம்ஜிஆருக்கு புகழ் கிடைக்கும் என்ற தோரணையில் பேசியுள்ளார். இது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. எம்ஜிஆர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். வரலாறு தெரியாமல் பாஜ மாநில தலைவர் பேசுவது விந்தையாக உள்ளது. அண்ணாமலை 1984ல் தான் பிறந்துள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, திறம்பட பணியாற்றி நாட்டு மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
இதை பற்றிய வரலாறு தெரியாமல், நீ பிறப்பதற்கு முன்பாகவே ஆட்சியில் அமர்ந்தவர் எங்கள் தலைவர் எம்ஜிஆர். அப்போதெல்லாம் உங்கள் தலைவர்கள் எந்த பதவியிலும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மற்ற கட்சிகளின் அடையாளத்தை வைத்து, மத்தியில் வெற்றி பெற்று ஆடுகின்றவர்கள் (பாஜ), எங்கள் தலைவருக்கு பெருமை சேர்க்கின்ற அவசியம் இல்லை. அதிமுகவை ஊழல் ஆட்சி, மோசமான ஆட்சி என்று விமர்சனம் செய்துள்ள அண்ணாமலைக்கு, அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி வைத்து போட்டியிட்ட போது எல்லாம் தெரியவில்லையா?. மேலும், சொந்த தொகுதியிலேயே தோற்று விட்டீர்களே.
பாஜ எந்த திட்டத்தையும் நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வரவில்லை. பாஜ மாநில தலைவர் பொறுப்பு ஏற்றதிலிருந்து, ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் அண்ணாமலை கொண்டு வரவில்லை. தேர்தல் பிரசாரத்தில் 500 நாட்களில் 100 திட்டங்களை கொண்டு வருவேன் என்று பேசினார். எத்தனை திட்டங்களை கொண்டு வந்தார்?.
அண்ணாமலை பேசுவது எல்லாம் பொய் மட்டுமே. விமர்சிப்பதை மட்டும் தான் வேலையாக வைத்துள்ளார். அனைத்து தலைவர்களும் உழைத்து பதவிக்கு வந்தவர்கள். ஆனால், உழைக்காமல் பதவிக்கு வந்த ஒரே தலைவர் அண்ணாமலை மட்டும் தான். பாஜவின் முன்னணி தலைவர்கள் எத்தனையோ பேர் இருந்தார்கள்.
அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாஜ மாநில தலைவராக பதவி கிடைத்தவுடன், தலைகால் தெரியாமல் ஆடிக்கொண்டு வருகிறார் அண்ணாமலை. தன்னை முன்னிலைப்படுத்தி மட்டும், தன்னை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அண்ணாமலைக்கு உள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மைக்கை கண்டால் பேசும் வியாதி உள்ளது. விமானத்தில் ஏறும் போது ஒரு மாதிரியாக பேசுவார், இறங்கும் போது ஒரு மாதிரியாக பேசுவார். அண்ணாமலைக்கு வாயும், நாக்கும்தான் முதலீடு. மக்களை பற்றி தெரியாத ஒரே தலைவர் அவர். பாஜ கூட்டணியில் இருந்த போது, மேலவையில் பல்வேறு மசோதாக்கள் கொண்டு வந்ததை நிறைவேற்ற அதிமுக தேவைப்பட்டது. அப்பொழுது நன்றாக இருந்தது. ஆனால், பாஜவின் உறவை முறித்த போது, அதிமுக கெட்டதாக தெரிகிறது. இது பாஜவின் இரட்டை வேடம். எம்ஜிஆரை காஷ்மீர், ஜார்கண்டில் யார் என்று தெரியாது என்று அண்ணாமலை கூறுகிறார். அவருக்கு வரலாறு தெரியவில்லை. இவ்வாறு எடப்பாடி தெரிவித்தார்.
₹113 லட்சம் கோடி கடன் வாங்கி பத்து வருஷத்துல என்ன பண்ணாங்க
எடப்பாடி கூறுகையில், “மத்தியில் 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த போது, ₹55 லட்சம் கோடி தான் கடன் இருந்தது. தற்போது 2024ம் ஆண்டில் ₹168 லட்சம் கோடி கடனில் இந்தியா உள்ளது. பத்தாண்டுகளில் ₹113 லட்சம் கோடி அதிகமாக கடன் வாங்கி உள்ளனர். என்ன திட்டத்தை கொண்டு வந்ததால் கடன் வந்தது?. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததால் தான், 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்” என்றார்.
பாஜ கூட்டணியில் இருந்த போது, மேலவையில் பல்வேறு மசோதாக்கள் கொண்டு வந்ததை நிறைவேற்ற அதிமுக தேவைப்பட்டது. அப்பொழுது நன்றாக இருந்தது. ஆனால், பாஜவின் உறவை முறித்த போது, அதிமுக கெட்டதாக தெரிகிறது.