சென்னை: அதிமுகவை ஒழிக்க அண்ணாமலையின் அப்பா, முப்பாட்டனால் கூட முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தரம் தாழ்ந்ததாக உள்ளது. ஒரு லாயக்கு இல்லாத தலைவரை தமிழக பாஜ பெற்றுள்ளது. அரசியலில் கருத்து மாற்றங்கள் என்பது இருக்கலாம். விமர்சனங்கள்கூட இருக்கலாம். அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். கடுமையாக பொதுச்செயலாளரை அவர் விமர்சனம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலையை பொறுத்தவரை அவர் மாநில தலைவரே அல்ல. அண்ணாமலையின் தகுதி என்ன, ஒரு கொடி பிடித்த தொண்டன் கூட அரசு கொடி கட்டிய காரில் முதல்வராக வர முடியும் என்றால், அது அதிமுகவில் இருந்து மட்டும்தான் முடியும்.
அண்ணாமலை நிலைமையே விட்டில் பூச்சி போல 7 நாட்கள்தான். அந்த அளவுக்குத்தான் அவரது அரசியல் நிலைமை உள்ளது. ஆனால் அதை மறந்துவிட்டு, இன்றைக்கு ஒரு பாரம்பரிய மிக்க கட்சி, 31 ஆண்டுகள் ஆண்ட கட்சி பற்றி பேச தகுதி, யோக்கியதை உள்ளதா? பாஜவை தமிழகத்தில் ஜெயிக்க வைத்து ஆட்சியை பிடிப்பாராம். இது அவரது கற்பனை அரசியல். திராவிட இயக்கத்தை ஒழிப்பாராம். அதிமுகவை ஒழிக்க உங்கள் அப்பா, முப்பாட்டனால் கூட அது முடியாது. அண்ணாமலை 7 ஜென்மம் எடுத்தால்கூட அதிமுகவை ஒழிக்க முடியாது. தமிழகத்தில் 2 கோடி தொண்டர்களை கொண்டிருக்கிற தலைவரை இழிவுபடுத்துகிறார் என்றால், பியூஸ் போன அண்ணாமலையாகத்தான் மக்கள் பார்ப்பார்கள். தமிழகத்தில் பாஜ ஆட்சி அமைக்கும் என்பது கானல் நீர். கோட்டை பக்கம் அவர்கள் வரவே முடியாது. அடுத்த தேர்தலில் ஒரு எம்எல்ஏ கூட வர முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.