சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. முதல்வர் அடிக்கடி வந்து செல்வதால் அறிவாலயத்திற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று அதிகாலை 5 மணி அளவில், அறிவாலயம் அருகே வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை வளாகத்திற்குள் வீசினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பீர் பாட்டிலை வீசிய மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருந்தாலும் போலீசார் விடாமல் துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில், துரைப்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோவர்தன் (36) என தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர், அறிவாலயம் மீது பீர் பாட்டிலை வீசியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கோவர்தனை போலீசார் கைது செய்தனர்.