திருச்சி: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறனே் என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார். கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் அவர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதேபோல் திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள வில்சன், கவிஞர் சல்மா உள்ளிட்ட மூன்று பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறன். அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருப்பது ஆறுதலை தருகிறது. இதனை வரவேற்கிறேன். நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறுவது வியப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் நேர்மையாக தான் விசாரணை நடந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். சிபிஐ விசாரணை கேட்கலாம். திமுகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திமுக தலைமையிலான அணி மிக வலுவாக இருக்கிறது என்ற உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருப்பதாக சொன்னாலும் அவர்களுக்கு இடையே இன்னும் பிணைப்பு ஏற்படவில்லை. அவர்களுக்குள் முரண்பாடு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* தமிழ்தான் திராவிட மொழி கமல் பேசியது உண்மைதான்
கன்னடம் தமிழ் மொழியில் இருந்து பிரிர்ந்தது என்று கமல்ஹாசன் கூறி உள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என நிருபர்கள் கேட்டனர். அதற்கு திருமாவளவன், ‘தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை தேவநேய பாவானர் போன்றோர் மொழியியல் வல்லுனர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். கன்னடம் மற்றும் மலையாளம் பேசுவோர் அதன் உண்மைகளை ஏற்கத் தயங்கலாம்.
ஆனால், வரலாறு இதுதான். அதனை யாராலும் மறுக்க முடியாது. கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் ஒப்பிலக்கணத்திலும் இந்த உண்மை சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, தமிழில் இருந்து சமஸ்கிருத கலப்பால் பிற மொழிகள் உருவாகியுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரலாற்று உண்மையாகும்’ என்றார்.