சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி. வில்சன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
போதை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமன முறைகேடுகள் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டணத்தை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே இருந்த கட்டணம்தான் நடப்பு ஆண்டிலும் தொடரும்.