மதுரை: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவைப் பற்றி, பெரியாரைப் பற்றி வீடியோ ஒளிபரப்பியது எங்களுக்கு தெரியாது. அரசியல் இருக்காது என்று நம்பி சென்றோம் என அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: பேரறிஞர் அண்ணா சொன்னது போல மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என்ற கூற்றின்படி முருக பக்தர்கள் மாநாடுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
அழைப்பை ஏற்று முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் கலந்து கொண்டோம். நீதிமன்றம் அதில் உறுதியாக தீர்ப்பு வழங்கி உள்ளது, அதில் அரசியல் இருக்காது என்று நம்பிக்கையோடு நாங்கள் கலந்து கொண்டோம். இதனை தொடர்ந்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா குறித்து அவதூறு வீடியோ பரப்பப்பட்டதாக செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஒரு நாளும் கொள்கைகளை, கோட்பாடுகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பது தமிழ்நாடு மக்களுக்கு நன்றாக தெரியும்.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அண்ணாவைப் பற்றி, ஜெயலலிதாவை பற்றி அவதூறு பேசிய காரணத்தினால், என்ன முடிவு எடுத்தார் என்பது தமிழ்நாடு மக்களுக்கு நன்றாக தெரியும். நடைபெற்ற முருகன் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கும், உறுதிமொழிக்கும் அதிமுகவிற்கு சம்பந்தம் இல்லை என்பதை தீர்க்கமாக கூறுகிறோம். அண்ணாவைப் பற்றி, பெரியாரைப் பற்றி வீடியோ ஒளிபரப்பியது எங்களுக்கு தெரியாது. முழு வீடியோவை நாங்கள் பார்க்க முடியவில்லை,
ஏனென்றால் பார்ப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு இல்லை. நாங்கள் ஒளிபரப்பு செய்த பகுதிக்கு பின்புறத்தில் தான் அமர்ந்து இருந்தோம். எது எப்படி இருந்தாலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை பற்றி தவறாக யார் பேசினாலும் அதை நெஞ்சுரத்துடன் எதிர்க்கும் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் ஆகியோர் எங்களுக்கு மேடை நாகரிகம் கற்றுக் கொடுத்துள்ளார்கள். மேடை நாகரிகம் கருதியே நாங்கள் இருந்தோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.