திருவள்ளூர்: பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இம்மாதம் 20, 28 ஆகிய தேதிகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சலில் வரும் 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இந்த போட்டிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.