சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாக கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மனுவில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஞானசேகரன் என்பவரை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டியபோது ஞானசேகரன் ஒருவரிடம் பேசியதாகவும் அவர் சார் என்று மறு முனையில் இருப்பவரிடம் பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அப்படி ஒருவரும் இல்லை. ஞானசேகரன் அப்போது தனது செல்போனை பிளைட் மோடில் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணை குழுவும் அப்படி சார் என்ற ஒருவரும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு பிறகு பேட்டியளித்த சிறப்பு குற்றவியல் வழக்கறிஞரும் சார் என்று ஒருவரும் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு மேல் இந்த விஷயம் குறித்து பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான கே.அண்ணாமலை எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் ஞானசேகரனின் செல்போன் உரையாடலின் ஒரு வருடத்திற்கான பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ெதரிவித்துள்ளார். சம்பவம் நடந்த டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதி ஞானசேகரன் பேசிய செல்போன் பதிவும் தன்னிடம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தன்னிடம் வழக்கு தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் அதை விசாரணை அதிகாரிகளிடம் தந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி தராமல் அறிக்கைகளை விடுவது நீதிபரிபாலனைக்கு எதிரானது. இது குறித்து உரிய அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி கடந்த பிப்ரவரி 1ம் தேதி டிஜிபியிடம் மனு கொடுத்தேன். அதன் மீது நடவடிக்ைக இல்லை.
இதையடுத்து, அண்ணாமலையிடம் இது குறித்து விசாரணை நடத்தக்கோரி மே 31ம் தேதி டிஜிபிக்கும், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டரிடமும் புகார் கொடுத்தேன். எனவே, ஆதாரங்களை மறைத்தது அல்லது பொதுமக்களுக்கு தவறான தகவல்களை பரப்பியது குறித்து அண்ணாமலையிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.