சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 வருடங்கள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிச.23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டுக்கு மார்ச் 7-ந் தேதி மாற்றப்பட்டது. 75 சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 29 பேர் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 20-ந் தேதி முடிவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி கடந்த மே மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். மேலும் ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.மேலும் அவருக்கு என்ன தண்டனை வழங்குவது? என்பது குறித்து ஜூன் 2-ந் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜலட்சுமி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஞானசேகரனுக்கு 30 வருடங்கள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும், சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது. மாணவி வன்கொடுமை வழக்கை சிறப்பாக நடத்திய காவல்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். அதனை தொடர்ந்து, பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள்:
ஞானசேகரனின் தண்டனை விவரங்கள்
*விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்-3 மாதங்கள்
*சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் -1 மாதம்
*உடலில் காயத்தை ஏற்படுத்துதல் -1 ஆண்டு
*பாலியல் ரீதியான தாக்குதல் 3 ஆண்டுகள்
*கடுமையாக தாக்குதல் 7 ஆண்டுகள், ரூ.10,000 அபராதம்
*பாலியல் வன்கொடுமை 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள், ரூ.25,000 அபராதம்
*கொலை மிரட்டல் விடுத்தல் 7 ஆண்டுகள், ரூ.25,000 அபராதம்
*பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்-3 ஆண்டுகள், ரூ.10,000 அபராதம்
*தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் -3 ஆண்டுகள், ரூ.10,000 அபராதம்.
*மொத்தம் ரூ.90,000 அபராதம்
*சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.