Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு.. தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு!!

சென்னை : தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி 23ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் பிரதான குற்றவாளியாக இருந்த ஞானசேகரன் மீது 11 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, கடந்த மே 28ம் தேதி, சென்னை மகளிர் நீதிமன்றம் அவருக்கு குறைந்தது 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே, ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை இருந்தபோது பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியை மையமாக கொண்டு அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வலியுறுத்தியதாகவும், ஆனால் இதுவரை அவரிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் வழக்கறிஞர் ரவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என கூறப்படுகிறது.