Wednesday, June 18, 2025
Home ஆன்மிகம் தெளிவு பெறுவோம்

தெளிவு பெறுவோம்

by Porselvi

?மாலை நேரத்தில், விளக்கேற்றும் வேளையில், தவிர்க்க முடியாத அவசரம் எனும்போது மட்டுமாவது கடன் தரலாமா?
– டி.என். ரங்கநாதன், திருச்சி.

தவிர்க்க முடியாத அவசரம் எனும்போது பணம் தருவது என்பது கடன் என்ற கணக்கில் வராது. அதனை உதவி என்றே கருத வேண்டும். உதவி செய்வதற்குக் காலநேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவசரம் என்று வருபவர்களுக்கு உதவி செய்வதுதான் தர்மம். அதேநேரத்தில் எந்த விஷயத்திற்காக அவசரமாக பணம் கேட்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு உதவி செய்ய வேண்டும். நாம் செய்கின்ற உதவி உயிரைக் காப்பதற்காக என்றால் அதற்குக் கால நேரம் பார்க்கக்கூடாது. மாலை நேரத்தில் விளக்கேற்றும் வேளையில் தவிர்க்க முடியாத அவசரம் எனும்போது கடன் தருவதில் எந்தத் தவறும் இல்லை.

?சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா?
– அயன்புரம் த. சத்தியநாராயணன்.

வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால், அளவில் சிறியதாக இருக்க வேண்டும். லிங்கத்தின் திருவுருவம் நம் கைக்குள் அடங்கும் அளவிற்கு சிறியதாக இருந்தால் நல்லது. அதாவது லிங்கத்தை உள்ளங்கைக்குள் வைத்து விரல்களை மூடினால் வெளியே தெரியக்கூடாது. தினந்தோறும் அபிஷேகம் செய்ய வேண்டும். நம்மால் இயன்ற நிவேதனத்தையும் தவறாமல் செய்ய வேண்டும். ஓரிரு நாட்கள் ஊரில் இல்லை எனும் பட்சத்தில் ஒரு சொம்பில் சுத்தமான நீர் நிரப்பி வைத்துவிட்டுச் செல்லலாம். நீண்ட நாட்கள் ஊருக்குச் செல்லும் பட்சத்தில் வேறு யாராவது ஒருவரை தினசரி அபிஷேகம், நிவேதனம் செய்வதற்கு நியமிக்க வேண்டியது அவசியம். இயலாத பட்சத்தில் கையோடு எடுத்துச் சென்று நீங்கள் இருக்கும் இடத்திலேயே இறைவனுக்கு உரிய ஆராதனைகளைத் தவறாது செய்ய வேண்டும். இந்த நியமங்களைக் கடைப்பிடிக்க முடிந்தால் சிறிய அளவு சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். இயலாதவர்கள் சிவபெருமானின் படத்தை வைத்து பூஜிப்பதே நல்லது.

?வீட்டில் பூஜையின்போது பயன்படுத்தும் மணியின் கைப்பிடியில் சக்கரம், அனுமன், நந்தி என வடிவங்கள் உள்ளன. இவையும் தெய்வங்கள்தானே? இவற்றிற்கும் அபிஷேக ஆராதனை செய்யலாமா?
– சு. கௌரிபாய், பொன்னேரி.

செய்ய வேண்டும். தினமும் வீட்டிலுள்ள தெய்வ விக்கிரகங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம், தீபாராதனை ஆகியவற்றை செய்து முடித்தபிறகு இனிமேல் அன்றைய தினம் மணி அடிப்பதற்கான வேலை இல்லை என்றானவுடன் மணியின் மேலுள்ள தெய்வ வடிவத்திற்குச் சுத்தமான ஜலம் விட்டு அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம், புஷ்பம் வைத்து சிறிதளவு அன்னமும், பருப்பும் நிவேதனம் செய்து அதனைக் கொண்டுபோய் காகத்திற்கு வைக்க வேண்டும். ஆனால், இந்த மணிக்குத் தனியாக தீபாராதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

?பெண்கள் கவரிங் நகைகளை அணிகிறார்களே, இது சரியா?
– கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

சரியே. பாதுகாப்பிற்காக என்று மட்டுமல்லாமல் வசதியின்மை காரணமாகவும் பெரும்பாலான பெண்கள் கவரிங் நகைகளை அணிகிறார்கள். நகைகள் தங்கத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், திருமாங்கல்யம் கட்டாயம் தங்கத்தில்தான் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். தங்கத்தாலான ஆபரணத்தை ஒரு பெண்ணின் கழுத்தில் ஒரு ஆண் அணிவித்தால் அதுவே அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதற்கான சாட்சி. மற்றபடி பெண்கள் அலங்காரத்திற்காக அணிந்து கொள்ளும் நகைகள் தங்கத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் உரிமை பெண்ணிற்கு உண்டு. அதற்காக தத்தமது வசதி வாய்ப்பிற்கு ஏற்ற வகையில் அவர்கள் நகைகளை அணிந்து கொள்கிறார்கள். பெரும்பாலான ஆலயங்களில் உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்திற்குக் கூட கவரிங் நகைகளே பயன்படுத்தப்படுகின்றன. பெண்கள் கவரிங் நகைகளை அணிந்துகொள்வதில் தவறில்லை.

?உதடுகூட அசையாமல் ஜபிக்கப்படும் மந்திரம் அதிக சக்தி வாய்ந்ததா?
– தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

நிச்சயமாக. ஜபம் என்பதே உதடு அசையாமல் மனதிற்குள் சொல்ல வேண்டியதுதான். காயத்ரி ஜபம், மூலமந்த்ர ஜபம் என்று கேள்விபட்டிருப்பீர்கள். இந்த மந்திரங்களை உதடு கூட அசையாமல் மனதிற்குள் ஜபம் செய்யும்போதுதான் முழுமையான பலனை அடைய இயலும். அதேநேரத்தில் பாராயணம் செய்யப்படும் மந்திரங்களை அட்சர சுத்தமாக, சரியான ஸ்வரத்துடனும், ஒலியுடனும் உச்சரிக்க வேண்டும். உதாரணத்திற்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாமம் முதலான மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். அதிக சக்தி வாய்ந்த மந்திரங்களை உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும் என்ற கருத்து உண்மையே.

?இறைவனிடம் வைத்த வேண்டுதல்களை உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ கூறினால் வேண்டுதல் நடக்காமல் போய்விடும் என்கிறார்களே, அப்படியா?
– கா.பொன்மாயாண்டி, ராயபுரம்.

இல்லை. இதைச் சரியென்று ஏற்றுக் கொண்டால் நாம் நண்பர்களின் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்று பொருளாகிவிடும். நண்பன் என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். நம் மனதில் உள்ள குறைகளைத்தான் ஆண்டவனிடம் சொல்கிறோம். அந்தக் குறைகளைப் போக்கி நமக்குத் தேவையானதைத் தருமாறு வேண்டுதல் வைக்கிறோம். நம் மனக் குறைகளை இறைவனுக்கு அடுத்தபடியாக நாம் பகிர்ந்து கொள்வது நம்முடைய நண்பர்களிடம்தானே! அதேபோல நம்முடைய நலனை விரும்பும் உறவினர்களிடமும் நம்முடைய ஆதங்கத்தைச் சொல்வோம் அல்லவா? மனதிலுள்ள குறைகளை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியம்தான் கெடும். அதனை விடுத்து வெளியே கொட்டிவிட்டால் மனதில் உள்ள பாரம் குறைந்து லேசாகிவிடும், உடல் ஆரோக்கியமும் மேம்படும். இறைவனிடம் வைத்த வேண்டுதல்களை நண்பர்களிடமும், நம்முடைய நலனை விரும்பும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அதனால் வேண்டுதல் நடக்காமல் போய்விடும் என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi