ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து நாம் மகிழ்கிறோம் என்றால், அதே விஷயம் ஏமாற்றமளிக்கும் பொழுது, நாம் துன்பப்படுகிறோம் அல்லது துன்பப் படுவதற்கு தயாராகிறோம் என்று பொருள். ஒவ்வொரு விஷயத்திலும் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நம் விருப்பப்படி இல்லாவிட்டால் அது ஏமாற்றமாக மாறுகிறது. அந்த ஏமாற்றம் ஏக்கத்தையும் துன்பத்தையும் ஆற்றாமையையும் தருகிறது. அது மேற்கொண்டு செயல்படாமல் நம்மை முடக்கிப் போடுகிறது. இந்த உலகில் எந்த மாற்றமும் எப்பொழுதும் நடக்கலாம். அதற்குத் தகுந்த மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, எந்த மாற்றங்களும் ஏமாற்றம் தருவதில்லை. இதை பகவான் கீதையில் சம துக்க சுக என்கிறார். அந்த அற்புதமான ஸ்லோகம் இது.
அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸமதுகஸுக: க்ஷமீ (12-13)
அத்வேஷ்டா = அ + துவேஷ்ட = வெறுப்பு இல்லாமல்,ஸர்வ பூதா நாம் = அனைத்து உயிர்களிடத்தும், மைத்ர: = நட்புடன், கருண = கருணையுடன், ஏவ = நிச்சயமாக, ச = மேலும், நிர்மமோ = நான் எனது என்று எண்ணாமல், நிரஹங்கார: = நிர் + அஹங்கார = ஆணவம் இல்லாமல் (அஹம் = நான், எனது. கர் = செய்வது, செயல். அஹம் + கார = நான் செய்தேன், என்னால் நடக்கிறது என்ற எண்ணம். அகம்பாவம்), ஸம + துக்க + சுக = துக்கத்தையும், சுகத்தையும் சமமாக எண்ணி, க்ஷமீ = பொறுமையுடன், பொறுப்பவன்.
சம துக்க சுக என்றால் துக்கமும் சுகமும் வரும் இதை இரண்டையும் ஏற்றுக்கொள். ஆனால், இந்த இரண்டும் உன்னுடைய சமநிலையை இழக்கச் செய்யும் படியாக இருந்து விடாதே என்று பொருள்.
இதை ஒரு அழகான கவிதையில் கவியரசு கண்ணதாசன் சொல்லுகின்றார்.
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என் மனம் இறந்து
விடாது!
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம்
அறிவேன்!.
இதைத்தான் இராமன்
செய்கிறான்.
கைகேயி, ‘‘நீ 14 ஆண்டுகள் காட்டுக்குப் போக வேண்டும் இது அரசன் ஆணை’’ என்று சொன்னவுடன் மகிழ்கிறான்.ஏற்கனவே, தசரதன் ‘‘நீதான் அரசன் என்று அரசு பதவி கொடுத்தபொழுது அவனுக்குப் பெருமகிழ்ச்சி இல்லை. அதை ஒரு கடமை, அரசன் ஆணை’’ என்றுதான் ஏற்றுக்கொண்டான்.
இப்பொழுது ‘‘அரசன் ஆணை இது. நீ காட்டுக்குப் போ’’ என்று சொன்ன வுடன் அவனுக்குத் துக்கம் வரவில்லை. கிடைத்தபோது மகிழ்ச்சி வராததால், இழந்தபோது துக்கம் வரவில்லை.இந்த மனநிலைக்கு நேர் எதிர்ப்பட்ட நிலை தசரதனுக்கு இருந்ததால் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதில் அவனுக்கு இருந்த மகிழ்ச்சி முழுக்க, அவனுக்கு அரசாட்சி இல்லை என்றவுடன் துக்கமாக மாறியது. அதனால், உணர்ச்சியில் நிலைகுலைந்து மூர்ச்சையடைந்து விழுந்தான். அப்படி, இராமன் விஷயத்தில் நடந்து விட்டால் என்ன செய்வது, எப்படிச் சமாதானப்படுத்துவது என்று கூட கைகேயி கருதி இருக்கலாம். ஆனால் இராமன் அதற்கு நேர் எதிர் மன நிலையில் கம்பீரமாக நின்று கொண்டு முகத்தில் ஒரு சிறு சலனம்கூட இல்லாமல் நடந்து கொள்வதைப் பார்க்க கைகேயிக்கு வியப்பாக இருக்கிறது. இந்த நிதானம்தான் ஆண்மைக்கு அழகு. இது பொதுவாக வேறு எவரிடமும் காண இயலாது. இராமனின் முகமும் மனமும் எப்படி இருந்தது என்பதை கம்பன் மிக அற்புதமான ஒரு பாடலில் வர்ணிக்கிறான்
இப்பொழுது, எம்மனோரால்
இயம்புதற்கு எளிதே? – யாரும்
செப்ப அருங் குணத்து இராமன்
திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு;
அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தா
மரையினை வென்றது அம்மா!
பொதுவாக எந்த விஷயத்தையும் வர்ணித்துவிடும் ஆற்றல் பெற்றவர்கள் கவிஞர்கள். அந்த விஷயத்தை பெரிதுபடுத்தி, (exaggerate) வியப்புக்கு உரியதாகத்தான் சொல்வார்கள். அதுவும் தமிழ்க் கவிஞர்களைப் பொறுத்தவரையிலே அவர்களுடைய வர்ணனைக்குக் கட்டுப்படாத ஒரு விஷயமே இல்லை அதிலும் கம்பன் கெட்டிக்காரன். ஆனால், அந்த கம்பன் இந்த இடத்தில் இராமனுடைய மனநிலையை வர்ணிக்கும்பொழுது கை வாங்குகின்றான் அதைத்தான் முதல் தொடர் சொல்லுகிறது. ‘‘இப்பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே?’’ இராமனது திருமுகத்தின் சிறப்பை எம்மைப் போன்றவர்களால் சொல்வதற்கு எளிது அல்ல என்கிறான். ஒரு கடுமையான வரத்தை இராமன் மீது “தசரதனின் ஆணை” என்று வைக்கிறாள் கைகேயி. இது தசரதனுக்கும் கைகேயிக்கும் உள்ள தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் விஷயங்கள். அவள் தசரதனுக்குரிய அரசாட்சியை பரதனுக்கு கேட்பதில் கூட ஒரு விதத்தில் தவறில்லை ஆனால், இராமனை ஏன் காட்டுக்குப் போகச் சொல்ல வேண்டும்? இராமன் தசரதனுக்கு மட்டும் உரியவன் அல்லவே. அவள் கோசலைக்கு உரியவன். சீதைக்கு உரியவன். ஏன் அயோத்தியில் உள்ள ஒவ் வொருவருக்கும் உரியவன். இராமனைத் தனக்கு உரிய ஒரு பொருளாக தசரதன் எப்படிக் கருத முடியும்.? இதைத்தானே மகாபாரதத்தில் பாஞ்சாலியும் கேட்கிறாள். தன்னை வைத்து இழந்த பிறகு என்னை வைத்து இழக்கும் உரிமை தருமனுக்கு இல்லை என்பது அவளுடைய வாதம்.
சரி. இது இப்படியே இருக்கட்டும்.கைகேயியின் உத்தரவைக் கேட்ட வுடன் அவன் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நிதானமாக முகத்தை வைத்திருக்கலாம். கம்பன் என்ன சொல்கிறான் என்றால் ஒரு அழகான தாமரை சட்டென்று மலர்ந்தால் எப்படி இருக்குமோ அதைப்போல கைகேயியின் வார்த்தையை கேட்டவுடன் இராமனின் முகம் மலர்ந்தது ‘‘அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!’’ என்பது ரொம்ப முக்கியமான வரி. (அம்மா – வியப்பு இடைச்சொல்.)அப்படியானால் இந்த விஷயத்தை கேட்பதற்கு முன்னால் எப்பொழுதும் புன்னகையோடு இருக்கக்கூடிய இராமனுடைய முகம் கைகேயியின் வார்த்தையைக் கேட்டவுடன் இன்னும் மலர்ந்தது என்று பொருளாகிறது அல்லவா. அப்போது மலர்ந்த செந்தாமரை என்று மட்டும் சொல்லிவிட்டு இருந்தால் பரவாயில்லை. ‘‘அலர்ந்த செந்தாமரையினை வென்றது’’ என்று மலர்ந்த செந்தாமரை மலர் கூட இராமனின் முக மலர்ச்சிக்கு முன்னால் தோற்றுவிட்டது என்கிறான். சரி, இந்த முக, மன மலர்ச்சிக்கு என்ன காரணம்? அதையும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா!தனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் கிடைக்காதபோது ஒருவனுக்கு மனமகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று சொன்னால், அதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா! அது என்ன காரணம்?
பார்ப்போம் வாருங்கள்!
(தொடரும்)