திருக்கழுக்குன்றம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது தாழக்கோயில் இத்தலத்தில் உள்ள பக்தவத்சலேஸ்வரர் சந்நதியில் வீற்றிருக்கும் திரிபுரசுந்தரி அம்பாளின் திரு உருவம் அஷ்டகந்தங்கள் என்னும் மூலிகை கலவைகளால் ஆனது. இதன் காரணமாக ஆடிப்பூரம், நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் மட்டுமே அம்மனுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற தினங்களில் அம்பாளின் திருவடிகளுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளின் திரு உருவம் மருத்துவ பொருட்களால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பக்தர்கள் அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தஞ்சையிலிருந்து தஞ்சை-திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. வல்லம் ஏகெளரியம்மன் கோயில். இங்கு அம்மன் எட்டுத் திருக்கரங்களுடன் பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இந்த அம்மன் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அசுர குணம் கொண்டவர்களை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஒரு முகமும், அல்லல்பட்டு வரும் அடியவர்களின் துயர் தீர்க்க சாந்தமுடன் இன்னொரு முகமும் அமைந்துள்ளது. இப்படி இரு திருமுகங்களுடன் அமைந்த அம்மனை காண்பது அரிது.
நெல்லை – காந்திமதியம்மை கோயிலில் வேறு எந்த அம்மன் கோவிலிலும் இல்லாதபடிக்கு ஆடிப்பூர உற்சவத்தில் நான்காம் திருநாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடக்கின்றது. இதை நடத்துபவர்கள் உள்ளூர் நாதஸ்வர கலைஞர்கள். இந்த வைபவத்தின்போது பயறு வகைகளை ஊறப் போட்டு அம்மனின் வயிற்றில் கட்டப்படும். அப்போது ஒரு கர்ப்பிணிப் பெண்போல அம்மன் காட்சியளிப்பார். ஆடி வெள்ளிகளில், புதிய பட்டு உடுத்தி, சந்தனம், ஜவ்வாது பூசி, தலையலங்காரம் செய்து, மாலை அணிந்து, தங்க நகைகள் ஜொலிக்க விளங்குவாள். அப்போது அனைத்து பழ வகைகளும், பிரசாதங்களும் நைவேத்தியமாக இவளுக்கு படைக்கப்படும். ஆடி மாத வெள்ளி, செவ்வாய்களில் அளிக்கப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால், பிள்ளைவரம் வேண்டுபவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
சேலம் குகை ஸ்ரீமாரியம்மன், காளியம்மன் கோயிலில் ஆடி திருவிழா 24 நாட்கள் நடக்கும். இதில் ஒரு பகுதியாக நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே இங்கு மட்டுமே வண்டி வேடிக்கை வேண்டுதல் நிறைவேற நடத்தப்படுகிறது. இதில் கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் கடவுள் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவது தான், வண்டி வேடிக்கை விழாவின் சிறப்பம்சம். திருவிழாவின்போது பக்தர்கள் நோன்பு இருந்து கடவுள் உருவங்களைத் தரித்து, வண்ண வண்டிகளில் வலம் வருவர். பெரும்பாலும் புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். பெண்கள் இந்நிகழ்வில் பங்கு பெறுவதில்லை. ஆண்களே பெண் வேடமிட்டு வருவர். அலங்கார வண்டிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குகை கோயிலை மூன்று முறை சுற்றிச் செல்லும். குகை மாரியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.