ஸூமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா
இது அம்பாளுடைய வாச ஸ்தானத்தைப்பற்றி சகஸ்ரநாமம் நமக்குச் சொல்கிறது. இதை அப்படியே அந்தர்முகமாக சாதகன் தியானம் பண்ணும்போது, அவனுக்கு என்ன உண்மை அவனுக்கு தெரிகிறது என்பதையும் பார்ப்போம். ஏனெனில், இதற்கு முன்பு நாம சாமரஸ்யம், ரூப சாமரஸ்யம், அதிகார சாமரஸ்யம் என்று பார்த்தான். நிர்குணமான வஸ்துவை சகுணமாக பார்க்க ஆரம்பித்து, அதற்குப் பிறகு கேசாதி பாதாந்தமாக அந்த வஸ்துவை தியானம் செய்து, அதற்குப்பிறகு காமேஸ்வர, காமேஸ்வரியாக அந்த வஸ்துவை தியானம் பண்ண பிறகு, ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா என்ற வாசஸ்தானத்தை தியானம் பண்ணும்போது அவனுக்கு உள்ளே என்ன ஸ்பூர்த்தி ஏற்படுகிறதெனில், நாம் அனுபவிக்கக்கூடிய அவஸ்தைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
அது எப்படி என்று கொஞ்சம் விளக்கமாக பார்ப்போமா!
இந்த மூன்று ஸ்ருங்கங்களும் முதலில் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். முதல் ஸ்ருங்கம் பிரம்ம லோகமாகவும், இரண்டாவது விஷ்ணு லோகமாகவும், மூன்றாவது ருத்ர லோகமாகவும் காட்டப்படுகின்றன. பிரம்ம லோகம் என்பது ஜாக்ரத் அவஸ்தை. (வெறுமே நாம் பார்க்கும் உலகம். பிரபஞ்ச தோற்றம் அவ்வளவே). விஷ்ணு லோகம் சொப்பன அவஸ்தை. எப்படி மனமானது தூக்கத்தில் தனக்குத்தானே ஒரு உலகை உருவாக்கிக் கொண்டு கனவு காண்கின்றதோ அந்த உலகம். ருத்ர லோகம் என்பது நமது ஸுஷுப்தி அவஸ்தை. இந்த பிரபஞ்ச படம் எந்த மனதில் தோன்றியதோ அந்த படம் ஒடுங்கி கனவுகள் கூட அற்ற நிலை. நாம் இந்த அவஸ்தையைத்தான் தினமும் உணர்கிறோம். அப்போது இந்த மூன்றுமே நாம் அனுபவிக்கக் கூடியது. இந்த மூன்றும்தான் வெளியிலேயும் நடக்கக்கூடியது. பிரபஞ்சத்தில் வெளியேயும் இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாமும் தினப்படி இதைத்தான் நமக்குள்ளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் பகலில் விழித்துக் கொண்டிருக்கிறோம். பிறகு இரவு சொப்பனத்திற்குப் போகிறோம். அதற்கும் அப்பால் கனவுகளற்ற சுஷூப்திக்கு போகிறோம். இந்த சுஷுப்தி என்கிற கனவுகளற்ற நிலைக்கு போய்விட்டாலே, நாம் உண்மையில் நம்முடைய ஆத்மாவான சொரூபத்தை அறிந்து கொள்கிறோம். ஆனால், அது நமக்கு தெரிவதில்லை. உபநிஷதம் இதைத்தான் அஹரஹர் கச்யந்தே மூடா… என்று, தினம் தினம் அந்த இடத்திற்கு போயும் கூட அதை அறியாமல் திரும்பி வருகிறாயே என்கிறார்.
பகவான் ரமணரின் முதல் உபதேசமே இதுதான். இப்போது நீ கேட்கும் இத்தனை கேள்விகளும், பிரச்னைகளும் நீ தூங்கும்போது இருந்தனவா… அப்போது எங்கு இருந்தாய். அந்த கேள்வி கேட்பவன் எங்கு இருந்தான். இப்போது அவன் தான் என்னவாக இருந்தான் என்பதை மறந்து விட்டு இப்போது இங்கு கேள்வி கேட்கிறான். இப்படி கேள்வி கேட்பவன் யாரென கேள் என்று தூக்கத்தில் நாம் இருந்த நிலையை சுட்டிக் காட்டுகிறார். தூக்கம் என்பது ஞான நிலை அல்ல. ஆனால், தூக்கத்தில் நீங்கள் சென்று ஒடுங்கிய இடமே அந்த ஞான நிலையாகும். இந்த மூன்று நிலைகளையும் நாம் கடந்து கடந்து போய்க் கொண்டே இருக்கிறோம்.வெளியே கணத்திற்கு கணம் சிருஷ்டி நடக்கிறது. அதேபோல ஸ்திதியும் நடக்கின்றது. அதேபோல சம்ஹாரமும் நடக்கிறது. நாம் இப்போது கவனமாக இன்னொரு விஷயத்திற்குள் நுழையப் போகிறோம். கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இந்த வெளியுலகத்தை பார்க்கிறோம் அல்லவா… நம்முடைய பார்வையில் ஜாக்ரத்தாக இருக்கிறது. ஆனால், அந்த பரம வஸ்துவின் பார்வையில் சொப்பனமே. அதனால்தான், நம்முடைய விழிப்பு நிலையை ஞானிகள் இது உன்னுடைய கனவு என்கிறார். இன்னொன்று நாம் சொப்பன அவஸ்தைக்குள் போகிறோம் அல்லவா… அங்கு இங்கு எப்படி பார்த்தோமோ அப்படியே எல்லாவற்றையும் பார்க்கிறோம். இப்போது பார்ப்பது போலவே எல்லாவற்றையும் பார்க்கிறோம். அந்த இடத்தில் மனமே எல்லாவற்றையும் சிருஷ்டி செய்கிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு மேடையில் அமர்ந்து பேசுவதாக கனவு காண்கிறீர்கள். அப்படிப் பேசும்போது எதிரே உட்கார்ந்து நிறைய பேர் கேட்கிறார்கள். அப்போது பேசுபவரும் நீங்கள்தான், அதை உட்கார்ந்து கேட்பவர்களும் நீங்கள்தான். நீங்கள்தான் அவர்களாகவும் ஆகியிருக்கிறீர்கள். அங்கு நீங்கள் தூங்குகிறீர்கள். ஆனால், உங்கள் மனம் உங்களையும் நீங்கள் பேசுபவரையும் அதை கேட்பவர்களையும் சிருஷ்டி செய்து இருப்பது புரிகிறது. அந்த இடத்தில் மானச சிருஷ்டி நடக்கின்றது. உங்கள் கனவில் நீங்களாகவும் அவர்களாகவும் இருக்கிறீர்கள். இதேபோலதான் வெளியேயும் நிகழ்கிறது. அது தெரியவரும்போது இந்த மாயா உலகம் உடைந்து போகிறது. நீங்கள் விழித்தவும் கனவு கலைவதுபோல, இந்த ஜாக்ரத் உலகத்தின் கனவும் நீங்குகிறது. இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம். நாம் இப்போது வெளியில் உள்ள பிரபஞ்சத்தை பார்க்கிறோம் அல்லவா… இது பிரம்மாவினுடைய சிருஷ்டி என்று சொல்கிறோம். நாம் உள்ளே பார்ப்பதை மனோ சிருஷ்டி என்று சொல்கிறோம். நாம் உள்ளே பார்ப்பதை எப்படி நம்முடைய மனோ சிருஷ்டி என்று சொல்கிறோமோ, அதேபோலத்தான் வெளியில் இருக்கக்கூடிய பிரம்ம சிருஷ்டி இருக்கிறதல்லவா… அது விராட் புருஷனுடைய மனோ சிருஷ்டியே ஆகும்.
அது பரமாத்மாவின் மனோ சிருஷ்டியே. அது பிரம்மா மூலம் சிருஷ்டியாக மாறியிருக்கிறது. இதை காண்பிப்பதற்காகத்தான் விராட் புருஷனான இருக்கக் கூடிய விஷ்ணு யோக நித்திரையில் இருக்கிறார். அவருடைய மானசத்திலிருந்துதான் இந்த சிருஷ்டி உண்டாகியிருக்கிறது என்று காண்பிப்பதற்காகத்தான் பெருமாள் ரங்கநாதராக சயனக் கோலம் பூண்டு, அவருடைய நாபியிலிருந்து வரக்கூடிய கமலத்தில் பிரம்மா இருக்கிறார். இது எதை காண்பித்துக் கொடுக்கிறதெனில் விராட் புருஷனாக சுவாமி சயனம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய மானசத்தில் அவருடைய சங்கல்பத்தில் எது எதெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் நாம் வெளியில் சிருஷ்டியாக பார்க்கிறோம். அதை சிருஷ்டி செய்வதற்கான அதிகாரத்தை பிரம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அந்த பிரம்மாவிற்கு தன்னுடைய நாபிக் கமலத்தில் இடம் கொடுத்திருக்கிறார். இது எதைக் காட்டுகிறதெனில், தன்னுடைய துரீய ஸ்தானம் என்கிற உயர்ந்த நிலையிலிருந்தே பிரம்மாவை உற்பத்தி செய்கிறார். செய்யவும் வைக்கிறார். இன்னும் பார்க்கப் போனால் நாபிக் கமலம் என்பது நமக்கு துரீய ஸ்தானமும் ஆகும். அந்த இடத்திலிருந்து வெளியே வருவதே சிருஷ்டி. சாதாரண சிருஷ்டி அல்ல. பிரபஞ்ச சிருஷ்டி. அதனால்தான், காஞ்சிபுரம் நாபி கோத்திரம் என்று சொல்வது வழக்கம்.
மேலும், தன்னுடைய மூச்சு காற்றாக இருக்கக்கூடிய வேதத்தை பிரம்மாவிற்கு கொடுத்து இந்த சிருஷ்டியை நடத்துகிறார். அப்படி சிருஷ்டியை நடத்தும்போது, அந்த பிரம்மாவானவர் பரமாத்மாவை தியானம் செய்யும்போது பிரம்மாவினுடைய புருவ மத்தியிலிருந்து ருத்ரன் உற்பத்தி ஆகிறார். அந்த ருத்ரன் சம்ஹாரம் செய்கிறார். இந்த பிரம்மா விஷ்ணு ருத்ரன் இந்த மூன்று பேரும்… எப்படி இந்த சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரத்தை செய்கிறார்கள் என்பதை நமக்கு ஓரளவிற்கு இப்போது தெரிய வருகிறது. இப்போது நாம் அனுபவிக்கக்கூடிய ஜாக்ரத், சொப்பனம், சுஷுப்திதான் இந்த பிரபஞ்சத்தில் நடக்கக்கூடிய சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்பதும் ஓரளவிற்கு புரிகிறது. பலமுறை கேட்டும் பலமுறை சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. ஒருமுறை கேட்டாலோ அல்லது படித்தாலோ சட்டென்று புரியாது. ஆனால், நம்மையும் பிரபஞ்சத்தையும் நமக்குள் நடப்பதையும் அறிந்து கொள்ளும்போது இது கொஞ்சம் புரிய வரும்.இப்போது தினப்படி இதைத்தான் அனுபவிக்கிறோம். என்னவென்றே தெரியாமல் விழித்துக் கொள்கிறோம். என்னவென்றே தெரியாமல் தூங்குகிறோம் என்று இல்லாமல் விழிப்பது, கனவு காண்பது, தூங்குவது இவை எல்லாமுமே ஏதோவொரு ஒழுங்கு நிலையில் ஏதொவொரு தத்துவார்த்தத்தில் நடக்கிறது என்று தெரிய வருகிறது. நமக்குள் நடப்பது போலவே வெளியே பிரபஞ்சத்திலும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நடக்கிறது என்பதும் புரிகிறது. அப்படி புரியும்போது இந்த மூன்று நிலைகளுக்கும் கர்த்தாக்கள் யாரென்று பார்த்தால் பிரம்மா விஷ்ணு ருத்ரன்.
இப்போது ஸுமேரு ஸ்ருங்க மத்யஸ்தா என்று சொல்லும்போது மத்ய ஸ்ருங்கத்தில் அம்பாள் இருக்கிறாள். இந்த மூன்று ஸ்ருங்கமாக இருக்கக் கூடிய ப்ரம்மா விஷ்ணு ருத்ரன் மூவரையும் தாண்டி மத்தியில் நான்காவதாக இருக்கக் கூடிய ஸ்ருங்கத்தால்தானே அம்பாள் இருக்கிறாள். இந்த உயரமான ஸ்ருங்கத்தில் இருப்பதால் அவள் என்ன காண்பித்துக் கொடுக்கிறாள் என்றால், பிரம்மா விஷ்ணு ருத்ரன் போன்றோரால் இந்த பாஹ்ய என்கிற வெளிப்புற பிரபஞ்சத்தினுடைய சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் மூன்றுக்கும் காரணம், ஆதாரம் அவள்தான். அதேபோல அந்தர்முகமாக நடக்கக் கூடிய நமக்குள்ளும் ஒரு சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் போன்றவையான, ஜாக்ரம் சொப்பனம் சம்ஹாரம் என்கிற இந்த மூன்றுக்கும் ஆதாரமும் அவள்தான். அப்படி நான்காவதாக இருக்கக் கூடிய மத்ய ஸ்ருங்கத்தில் நான்காவது வஸ்துவாக எவள் இருக்கிறாளோ அவளே பிரபஞ்ச சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரத்திற்கும், ஜீவாத்மா என்கிற நம்மைப் போன்றவர்களுக்குள்ளும் நடப்பதற்கு அவளே ஆதாரம். பஹிர்முக அவஸ்தைக்கும் அவள்தான் ஆதாரம். அந்தர்முக அவஸ்தைக்கும் அவள்தான் ஆதாரம். பிரபஞ்ச அவஸ்தைக்கும் அவள்தான் ஆதாரம். இந்த சரீர அவஸ்தைக்கும் அவள்தான் ஆதாரம்.
அதனால் இந்த மூன்றையும் கட்டுப் படுத்துபவளாக நான்காவது ஸ்ருங்கத்தில், நடுவில் நான்காவது பொருளாக அம்பாள் இருப்பதை மாண்டூக்ய உபநிஷதம் பிரபஞ்சோப சமம் சாந்தம் ஷிவம் சதுர்த்தம் அத்வைதம் மன்யந்தே… இந்தப் பிரபஞ்சமானது எங்கே உற்பத்தியாகி எங்கே ஒடுங்குகிறதோ ஷிவம் என்று சொல்லக்கூடிய அந்த மங்களமான வஸ்து… நான்காவது நிலையில் இருக்கிறது. அத்வைதமாக இருக்கிறது. தன்னைத்தவிர இன்னொரு வஸ்து இல்லாமல் அத்வைதமாக இருக்கிறது. இந்த நான்காவது நிலை என்பது எதுவெனில், பிரம்மா விஷ்ணு ருத்ரன் என்பதை தாண்டிய நான்காவது நிலை. ஜாக்ரத், சொப்பனம், சுஷூப்தி என்ற மூன்றையும் தாண்டிய நான்காவது நிலை. சிருஷ்டி ஸ்திதி, சம்ஹாரம் என்ற மூன்றையும் தாண்டிய நான்காவது நிலை. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கிற மூன்றையும் தாண்டிய நான்காவது நிலை. பூஹ்… புவஹ… சுவஹ… என்பதையும் தாண்டிய நான்காவது நிலை. தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள், தியானம் என்கிற திரிபுடியையும் தாண்டிய நான்காவது நிலை. இப்போதும் உள்ளேயும் வெளியேயும் உள்ள மூன்று நிலைகளையும் கடந்து நான்காவது நிலையில் இருக்கிறாள். எங்கெல்லாம் நாம் trinity என்று சொல்கிறோமோ அந்த trinity இல்லாத இடத்தில் அவள் இருக்கிறாள். இந்த trinity ஐ தாண்டி fourth stateல் இருக்கிறாள். அவள் இருக்கக்கூடிய இடத்தில் dualityயும் கிடையாது. அப்போது அந்த ஸ்தானத்திற்கு துரீய ஸ்தானம் என்று பெயர். அந்த இடத்தில் no duality, no trinity, no plurality. அங்கு இருமை கிடையாது. மும்மை கிடையாது. பன்மை கிடையாது. ஒருமை என்கிற இடத்தில் ஏகமாக இருக்கிறாள்.
மாண்டூக்ய உபநிஷதம் நாம் வெளியே பார்க்கும்போது பரமாத்ம வஸ்து ஹிரண்ய கர்ப்பன், விராட், ஈஸ்வரன் என்று மூன்று நிலைகளில் இருப்பதாகச் சொல்கிறது. இவைதான் முறையே பிரம்மா விஷ்ணு ருத்ரன் ஆகும். இந்த மூன்றையும் கடந்த நிலையே அந்த ஆத்மா. இப்போது அந்தர்முகமாக பார்த்தாலும் துரீய நிலை ஆத்மாதான். வெளியே பஹிர்முகமாக பார்த்தாலும் துரீய நிலை ஆத்மாதான். அப்போது நம்முடைய அந்தர்முகமான அவஸ்தையும் பகிர்முகமான அவஸ்தையும் எங்கு சந்திக்கின்றது என்றால், நான்காவது நிலையில்தான் சந்திக்கின்றது. அங்கு பிரணவ மாத்திரமாக சின் மாத்திரமாக ஆத்மா என்கிற நிலையிலிருக்கிறது. அந்த நான்காவது நிலை எதை உபநிஷதம் சொல்கிறதோ அதைத்தான் இங்கு நாமம் ஸுமேருவுக்கு உச்சியில் ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா என்று பார்க்கிறோம்.
இதற்கான கோயிலாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை சொல்லலாம். ஏனெனில், பிரம்மாவும் விஷ்ணுவும் தேடித்தேவி அடிமுடி காணமுடியாதபோது சட்டென்று அந்த பிரம்ம வஸ்து ஸ்தானுவாக ஸ்தம்பமாக இறங்கியது. எப்படி ஸுமேரு மத்யத்தில் ஸ்ருங்கமாக இருக்கிறதோ அதுபோல. மேலும், திருவண்ணாமலைக்கே அந்த மலைக்கே சக்ரபுரி என்று பெயர் உண்டு. ஏனெனில் அந்த மலையின் உச்சியிலிருந்து பார்க்கும்போது பறவைப் பார்வையில் பார்க்கும்போது அந்த உச்சியானது பிந்து ஸ்தானமாகவும். அதைச் சுற்றிலும் உள்ளது சக்கரம்போலவும் இருக்கும். இன்னொன்று ஆச்சரியாக அருணாசலேஸ்வரர் கோயிலில் அர்த்த ஜாம பூஜைக்கு ஈஸ்வரன்போகும்போது சிவாச்சாரியார்கள் உருவமாக சிவனை எடுத்துச் செல்லாது, மலை வடிவிலான பிரதிமையையும் அதன் உச்சியில் ஈஸ்வரனுடைய பாதத்தையும் கொண்ட விக்கிரத்தையும் எடுத்துச் செல்வார்கள். எனவேதான். இந்த மலையே சக்ரமாகவும் அதன் உச்சியில் பாதங்களாக சிவ சக்தி சொரூபமாகவே ஸ்ரீபாதங்களாக நமக்கு காட்சி கொடுக்கிறார்கள்.
(சுழலும்)