Tuesday, June 17, 2025
Home ஆன்மிகம் பதிகமும் பாசுரமும்

பதிகமும் பாசுரமும்

by Porselvi

பாகம் 8

சைவமும், வைணவமும் ஒருங்கே தழைத்தோங்கும் திருத்தலங்களை நாம் அடுத்தடுத்து தரிசித்து வருகிறோம். இந்த பாகத்தில்;

20. திருவிண்ணகர் / திருநாகேஸ்வரம்

திருவிண்ணகர் (உப்பிலியப்பன் கோயில்) திவ்ய தேசம், கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. திருமங்கை ஆழ்வார் (34), பேயாழ்வார் (2), நம்மாழ்வார் (11) ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பெருமாளுக்கு ஒப்பிலா அப்பன் என்று பெயர். உப்பிலியப்பன் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. புராண அடிப்படையில், இந்தக் கோயில் பிரசாதத்தில் உப்பு சேர்க்கப்படுவது இல்லை என்பதால் இவர் உப்பிலியப்பன்!

“மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால்
இடும்பைக் குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான்! திரு மார்பா!

சிறந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே’’ (திருமங்கை ஆழ்வார் 1459)
‘‘திருவிண்ணகர் மேயவனே! என்னுடைய பழைய பாவங்களால் உன்னை மறந்தேன். அதனால் படுகுழியில் தள்ளப்பட்டு, பிறப்பு இறப்பு என்ற சுழலில் சிக்கிக் கொண்டேன். திருமகள் மார்பா! என்னை உன் திருவடிக்கு அழைத்துச் செல்.’’

இந்தத் திருவிண்ணகரப் பெருமாள் கையில் “மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்று எழுதப்பட்டு இருக்கும். ‘என்னையே வந்து சரணடை’ என்று பொருள். அதைத்தான் திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார். இப்பகுதியின் பாடல் பெற்ற தலம், திருநாகேஸ்வரம். இது, உப்பிலி அப்பன் கோயிலிலிருந்து 800மீ தொலைவில் உள்ளது. மூலவர், நாகநாதசுவாமி மீது சம்பந்தர் (22), அப்பர் (30), சுந்தரர் (10) பாடியுள்ளனர்.

“பொன்நேர் தரு மேனியனே புரியும்
மின்நேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே’’ (சம்பந்தர் 2.24.1)

‘‘அடர்ந்த காவிரியின் வயல் சூழ் திருநாகேஸ்வரத்து இறைவன் பொன் நிறமான மேனி உடையவன்; சடைமுடி உடையவன்; அவரை சரணடைந்தால் நமது தீவினைகள் தீரும்’’.

21. திருமயிலை / திருஅல்லிக்கேணி திருமயிலை (மயிலாப்பூர்), திருவல்லிக்கேணி இரண்டும் சென்னையில் 6 கி.மீ. பரப்புக்குள் உள்ளன. இங்குள்ள பாடல் பெற்ற தலம், கபாலீஸ்வரர் கோயில் (சம்பந்தர் 11). பாசுரம் பெற்ற திவ்ய தேசம், பார்த்த சாரதிப் பெருமாள் கோயில். (திருமங்கை ஆழ்வார் 10, பேயாழ்வார் 1, திருமழிசை ஆழ்வார் 1 பாசுரத்தில், மயிலை திருவல்லிக்கேணி என்று திருவல்லிக்கேணி குறிப்பிடப்பட்டிருக்கிறது (திருமங்கை ஆழ்வார் 1069)
திருமயிலையில் ஞானசம்பந்தர் பதிகம் பாடி எலும்பாய் இருந்த பூம்பாவைக்கு உயிர் அளித்ததாக வரலாறு.

“மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்’’ (சம்பந்தர் 2.47.1)

‘‘பூம்பாவையே! அழகான மயில்கள் அதிகம் நடமிடும் திருமயிலைக் கோயில் திருவிழாவில், உருத்திரர்களுக்கும், கணங்களுக்கும் பக்தர்கள் உணவு அளிப்பதை நீ காண வேண்டாமா?’’ என்று இறந்த பூம்பாவையின் எலும்புகளைச் சுட்டிக்காட்டி, கபாலீஸ்வரரிடம் மானசீகமாக வேண்டுகிறார். பூம்பாவை உயிர்த்தெழுகிறாள். தன் 11 பதிகங்களில் கோயிலில் நடக்கும் 11 மாத விழாக்களை வருடா வருடம் காண அவளுக்கு உயிர் அளிக்குமாறு இறைவனை வேண்டுகிறார் சம்பந்தர்.

திருவல்லிக்கேணி மங்களாசாசனம்:
“பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை திருவல்லிக்கேணிக் கண்டேனே
(திருமங்கை ஆழ்வார்’’ 1075)

‘‘பள்ளிக்குச் செல்லும் சிறுவன் (பிரஹலாதன்) பெருமாளின் ஆயிரம் நாமங்களைக் கூறுகிறான். அவன் தந்தை இதை ஏற்காமல் குழந்தையைத் துன்புறுத்துவதை பெருமாள் எப்படிப் பார்த்துக் கொண்டு இருப்பார்? நீண்ட பற்களோடும் அகண்ட வாயோடும் மிகுந்த கோபத்துடனும் தெள்ளிய சிங்கமாய் உக்ரமாய் தூணிலிருந்து வெளியே வந்து அரக்கனை நார், நாராகக் கிழித்த பெருமாளை நான் அல்லிக்கேணியில் கண்டேன்.

தெள்ளிய சிங்கர், அழகிய சிங்கர் இரண்டும் பார்த்தசாரதிப் பெருமாளின் பெயர்கள். தெள்ளிய சிங்கர், காலப் போக்கில் துளசிங்கர் என்று மாறி இருக்கலாம். திருவல்லிக்கேணியில் பெருமாள் பார்த்தனுக்கு தேர் ஓட்டும் சாரதியாக இருப்பதால் மீசை வைத்து இருப்பார். இக்கோயிலில் பெருமாள் ருக்மிணி, சத்தியபாமா, சாத்யகி, பலராமர், பிரத்யும்னன், அநிருத்தன் அனைவரோடும் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கிறார். பெருமாளின் இன்னொரு பெயர் வேங்கட கிருஷ்ணன்.

22. திருவெண்காடு / திருநாங்கூர்

சீர்காழியிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது, ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில் கொண்டுள்ள, பாடல் பெற்ற தலமான திருவெண்காடு (சம்பந்தர் 33, அப்பர் 22, சுந்தரர் 10).
“பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண்டாவொன்றும்
வேயனதோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே’’ (சம்பந்தர் 2.48.2)

இந்தப் பதிகத்தில் சம்பந்தர் கோயிலிலுள்ள முக்குளத்தின் பெருமையைக் கூறுகிறார். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்க்குத் தீவினைகள் சேரா; பேய்கள் வாரா; நொய்கள் வாரா; கெட்ட சகுனங்கள் வாரா; குழந்தை பிறக்கும்; இஷ்டப்பட்டவை பூர்த்தி ஆகும் என்று கூறுகிறார்.

இவரது மற்றொரு பதிகம்:
“நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே’’ (சம்பந்தர் 3.15.11)

இது, நூற்பயன் பாடலாகும். அதாவது பதிகத்தை முழுமையாகப் படிப்பதால் வரும் நன்மைகளைக் கூறுவது. ‘வெண்காட்டுப் பதிகத்தைப் படிப்பவர்கள் அல்லல் அருவினை தீரும். இது ஆணை,’ என்று கூறுகிறார் சம்பந்தர். இது வெண்காட்டு ஈசரின் மகிமையையும் அவர் அருளால் சம்பந்தர் சொல் உண்மையாகும் என்பதையும் குறிக்கிறது.

பாசுரம் பெற்ற திருநாங்கூர் கிராமம் திருவெண்காட்டிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு 6 திவ்ய தேசங்கள், 5 கி.மீ பரப்புக்குள்ளும், மேலும் 6 திவ்ய தேசங்கள் பரவலாகவும் உள்ளன. இவை பன்னிரண்டும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டுள்ளன. திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருக்குரையலூர், திருநாங்கூரிலிருந்து 8 கி.மீ தொலைவில்,
திருநகரியின் அருகேல் உள்ளது. இப்பகுதியில் உள்ள திவ்ய தேசங்களின் பட்டியல்:

1. திருக்காவளம்பாடி
2. திரு அரிமேய விண்ணகரம்
3. திருவண்புருஷோத்தமம்
4. திருசெம்பொன்செய்கோயில்
5. திருமணிமாடக்கோயில்
6. திருவைகுண்டவிண்ணகரம்
7. திருவாலி-திருநகரி (திருமங்கை
ஆழ்வாருடன் (41) குலசேகர ஆழ்வார் 1)
8. திருத்தேவனார் தொகை
9. திருத்தெற்றியம்பலம்
10. திருமணிக்கூடம்
11. திருவெள்ளக்குளம்
12. திருப்பார்த்தன்பள்ளி

– இவற்றில் 2, 3, 4, 5, 6, 10 ஆகியவை திருநாங்கூரிலும் மற்றவை சுற்றி 10 கி.மீ தொலைவிலும் உள்ளன.

“கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார்
மன்னும் நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே’’ (திருமங்கை ஆழ்வார், 1308)

திருவெள்ளக்குளம் கோயில், அண்ணன் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வார், “அண்ணன் பெருமாளே! உமது மேனி ஆழ்கடல் போல் கரிய நிறத்தில் உள்ளது. போரில் வெற்றி பெரும் வீரர்கள் உள்ள நாங்கூரின் வெள்ளக்குளத்தில் அருள்பாலிக்கிறாய். என் இடர்களைக் களைவாயாக” என்கிறார். வெள்ளக்குளம் பெருமாள் திருமலைப் பெருமாளுக்கு அண்ணனாக கருதப்படுகிறார். அதனால் ஆழ்வார் அவரை ‘அண்ணா’ என்றே அழைக்கிறார்.

சம்பந்தரின் தேவாரத்தில், திருநெடுங் களப் பதிகம், ‘இடர் களையும் பதிக’ மாக எழுதப் பட்டுள்ளது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தர்களின் இடர்களைக் களைவது இறைவனின் கடமை என்று கூறுகிறார்கள். சம்பந்தர் “எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய்” என்று கோருகிறார். இறைவன் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட திரு நீற்றை அணியும் பக்தர் களின் இடர்களைக் களைவது இறைவனின் கடமை என்று பொருள்.

23. திருக்கடல்மல்லை / திருக்கழுக்குன்றம்

திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) சென்னையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் தெற்கே உள்ளது. இங்கு ஸ்தலசயனப் பெருமாள் திவ்ய தேசம் (திருமங்கை ஆழ்வார் 26, பூதத்தாழ்வார் 1) உள்ளது.
ஸ்தலசயனம் என்பது பெருமாள் தரையில் படுத்திருப்பதைக் குறிக்கும். இந்தக் கோயிலில் மட்டும்தான் பெருமாள் பூமியில் (தரையில்) படுத்துக்கொண்டு இருக்கிறார். மற்ற இடங்களில் அவர் பாம்பின் மேல் ஆரோகணித்திருக்கிறார் (சேஷ சயனம்).

புண்டரீக ரிஷிக்கு ஒரு நாள் அழகிய தாமரை கிடைத்தது. அதை அவர் பாற்கடலில் உள்ள பெருமாளுக்கு சமர்ப்பிக்க ஆசைப்பட்டு, ஒரு சொம்பினால் கடல் நீரை இறைத்துக்கொண்டிருந்தார். வயதானவராக உருமாறிய பெருமாள், அவரிடம், “என்ன செய்து கொண்டு இருக்கிறீர்?” என்று கேட்க, அவர், ‘‘பாற்கடல் செல்ல வழி அமைத்துக்கொண்டிருக்கிறேன்,” என்று கூறினார். பெருமாளும் உதவி செய்ய இருவரும் நீர் இறைத்தனர். வயதானவர் களைப்பு அடைந்து ரிஷியிடம் உணவு ஏதாவது கொண்டு வருமாறு கூற அவர் உணவு தேடிச் சென்றார். திரும்பி வந்தால், அப்படியே தரையில் படுத்திருந்த ஸ்தல சயனப்பெருமாளின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.

“பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே’’ (திருமங்கை ஆழ்வார் 1088).

“உலகை உண்டு உமிழ்ந்தவன், பவழத்தூண் போல் வலிமை வாய்ந்தவன், பாற்கடலில் கிடைத்த அமுதம், அரக்கன் கேசியின் வாயைப் பிளந்தவன், சிந்திப்பவர் சிந்தையுள் இருப்பவன், போரிடும் யானையின் கொம்பை ஒடித்தவன், மரங்களுக்கு நடுவே நடந்த பொற்குன்று போன்றவன், யானையின் துயர் தீர்த்தவன், கேட்டதைக் கொடுக்கும் கற்பகம் போன்றவன்‘‘ என்றெல்லாம் போற்றுகிறார், ஆழ்வார்.இங்கு பெருமாளை கண்ணனாக பாவித்துப் பாடுகிறார். பல இடங்களில் ஸ்ரீராமனாகப் பாடியிருக்கிறார்.

பெருமாள் இடர் களைபவர் என்பதையும் படித்திருக்கிறோம். அவர் சிந்திப்பவரின் சிந்தையில் இருப்பவர் என்ற “சிந்திப்பார் அவர் சிந்தை உளானை” என்ற சுந்தரரின் திருக்கச்சிப் பதிகம் வரியை நினைவுபடுத்துகிறது. திருக்கடல் மல்லையிலிருந்து 16 கி.மீ தொலைவில் பாடல் பெற்ற தலம் திருக்கழுக்குன்றம் (சம்பந்தர் 10, அப்பர் 2, சுந்தரர் 10) உள்ளது. இந்த மலைக்கு ஒரு காலத்தில் கழுகுகள் வந்து கொண்டிருந்தன. அதனால் இந்தப் பெயர்.

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை முதுபிணக்கா டுடையானை முதலானானை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப் பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக் காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே (அப்பர் 6.92.1) “இறைவன் கையில் சூலம் ஏந்தியவன்; அழகானவன்; சுடுகாட்டில் வாழ்பவன்; முதல்வன்; பசுவின் பஞ்ச கவ்யத்தால் வழிபடப்படுபவன்; தேவர்களின் தலைவன்; ஆலால விஷத்தை உண்டவன்; பிரம்மா, விஷ்ணுவால் போற்றப்படுபவன்; பக்தர் களைக் காப்பவன்; எளிதில் அடைய முடியாதவன்; கற்பகம் போன்றவன்: அந்த இறைவனை நான் கழுக்குன்றத்தில் கண்ணாரக் கண்டேன்.” திருமங்கை ஆழ்வார் ஸ்தலசயனப் பெருமாளைக் கற்பகம் என்றும், அப்பர் பக்தவத்சலேஸ்வரரைக் கற்பகம் என்றும் சொல்வதின் ஒற்றுமை குறிப்பிடத்தக்கது. அப்பரின் ‘கற்பகம்‘ கற்பக விருட்சமாகவும் சில சமயங்களில் ‘மயிலைக் கற்பகாம்பாளாகவும்’ பொருள்கொள்ளப்படுகிறது.

(தொடரும்)

பேராசிரியர் ஜி.ஸ்ரீநிவாசன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi