திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 200 டன் ஆஞ்சநேயர் சிலை லாரியில் எடுத்து செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால் ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக 10 பேர் கொண்ட குழுவினர் 26 அடி உயரம் 12 அடி அகலத்தில் ஒரே கல்லில் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை செய்துள்ளனர். தற்போது இந்த சிலையானது 2 மாவட்டங்களை கடந்து 80 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இறுதியாக வாலாஜாபாத் அடுத்த பழவேரி கிராமத்தில் உள்ள சிலை சிற்பம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இந்த நிலையில் சிலையை 180 டயர் கொண்ட பிரத்தியேக கார்கோ லாரியில் ஏற்ற 7 மணி நேரத்திற்கு மேலாக ஊழியர்கள் போராடினர். தொடர்ந்து ஜாக்கி மற்றும் கட்டைகளின் உதவியால் சிலையை லாரியில் நிறுத்தினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மண் சாலைக்கு கொண்டுவரப்பட்டு சிலை எடுத்து செல்ல முயன்ற போது முதலில் சிக்கல் ஏற்பட்டது. லாரியின் எடை ஒரு பக்கம் அதிகமானதினால் லாரி மேலும் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. அதனை ஜாக்கி மற்றும் கட்டையின் உதவியால் சரிசெய்து மீண்டும் லொறியை நகர்த்த முயற்சித்தபோது அதே இடத்தில் எடை அதிகமாக இருந்ததால் கடை வைத்து சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆஞ்சநேயர் சிலை மண்சாலைக்கு எடுத்து வந்த பிறகும் இரண்டு முறை சிக்கல் ஏற்பட்டதால் ஊழியர்கள் மற்றும் சிலை எடுத்து செல்பவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.