இன்றைய சுட்டீஸ்கள் படிப்பு, விளையாட்டு, சமையல்கலை, பொதுஅறிவு, தனித்திறமை என அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். அவர்களின் அபாரத் திறமைகளை எந்த வகையிலாவது வெளிப்படுத்தி வெற்றியாளர்களாவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர். எந்தத் துறையானாலும் வெற்றியாளர்களாகச் சாதனைப் படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை இன்றைய சுட்டீஸ்கள் நிரூபித்து வருகின்றனர். அந்தவகையில் கும்பகோணத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி பி.கே.அகஸ்தி சிறுவர்களுக்கான அனிமேஷன் படம் ஒன்றை உருவாக்கி அதனை திரையரங்குகளில் வெளியிட்டு திரைத்துறையில் சாதனைப் படைத்துள்ளார். இவர் கும்பகோணத்தில் உள்ள கார்த்தி வித்யாலயா இன்டர்நேஷ்னல் பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவருகிறார். கல்வி மட்டுமல்லாமல் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டுப் பரிசுகளைக் குவித்துவருகிறார்.
தனித்திறன் மற்றும் குழுத்திறன் போட்டிகளில் கலந்துகொண்டுப் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றுள்ளார். சிறுவயது முதலே சாதிக்கவேண்டும் என்ற லட்சியத்தை மனதில் வளர்த்துக்கொண்டதன் விளைவாக மாணவி அகஸ்தி குழந்தைகளுக்கான அனிமேஷன் படத்தை உருவாக்கி, சாதனைப் படைத்துள்ளார். அகஸ்தியின் இந்த முயற்சியும் அபாரத் திறமையும் திரை உலகினர் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குண்டான்சட்டி என்று பெயரிடப்பட்டு திரைக்கு வந்துள்ள குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் தமிழகம் முழுவதும் 120 திரையரங்குகளில் வெளியாகி சிறுவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவி அகஸ்தி, தனக்கு எப்படி இந்த எண்ணம் உருவானது, இதற்கான ஆரம்ப புள்ளி எது என்பதையும், பெற்றோரின் வழிகாட்டுதலையும் விரிவாக விவரித்துக் கூறுகையில், ‘‘என் பெயர் பி.கே.அகஸ்தி(12). நான் கும்பகோணத்தில் உள்ள கார்த்தி வித்யாலயா இன்டர்நேஷ்னல் பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவருகிறேன். என் தந்தை எஸ்.ஏ.கார்த்திகேயன், தாய் எம்.பூர்ணிமா ஆகியோர்தான் இன்று நான் பலராலும் பாராட்டப்படுவதற்கு முக்கிய காரணமானவர்கள்.
கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் பரவிய கொரோனா பெருந்தொற்றுக் காலத்தை யாரும் மறக்க முடியாது. எல்லோரும் வீட்டிலேயே இருக்கவேண்டியச் சூழல் ஏற்பட்டது. பள்ளிகளும் மூடப்பட்டு வெளியிலும் போக முடியாமல், வீட்டில் நாள்தோறும் செல்போன் பார்த்துக்கொண்டு பொழுதை வீணாகக் கழிப்பதை எனது பெற்றோர் விரும்பவில்லை. அதற்கு மாறாக புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுதிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். மேலும், என் அப்பா நிறைய காமிக்ஸ் புத்தகங்கள், பொதுஅறிவு புத்தகங்களை வாங்கி வந்துக் கொடுத்தார். புத்தகங்களை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். புத்தகங்களைப் படிக்கப்படிக்க எனது வாசிப்புத் திறன் அதிகரித்தது.முழுமையாக புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாகக் குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிகளவில் படிக்கத் தொடங்கினேன். அதில் வரும் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை என் மனஓட்டத்தில் திரைக்கதையாக சித்தரித்து மகிழ்ந்தேன்.’’ என்று கூறும் மாணவி அகஸ்திஅனிமேஷன் பட உருவாக்கத்துக்கான காரணத்தை விவரித்தார்.‘‘நான் படித்த புத்தகங்களில் வரும் கதைகளை என் பெற்றோர்களிடம் திரைக்கதை வடிவில் விவரித்து கூறினேன். நாட்கள் செல்லச் செல்ல எனக்குள் குழந்தைகளுக்கான கதைகளை புத்தகமாக எழுதும் ஆசை உருவானது. இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தபோது முதலில் மறுத்துவிட்டனர். ஒரு சில நாட்கள் கடந்தபின் என் பெற்றோர் நான் கதை எழுதுவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அப்போது, குழந்தைகளுக்கான கதையைப் புத்தகமாக எழுதுவதை விட அவர்களுக்குப் பிடித்த அனிமேஷன் படமாக உருவாக்கினால் அசத்தலாக இருக்குமே, என்று பெற்றோரிடம் எனது விருப்பத்தை தெரிவித்தேன். நான் கூறியதைக் கேட்டு எனது பெற்றோர், என் மீது கொண்ட அன்பு காரணமாகவும் என் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாகவும் அனிமேஷன் படம் தயாரிக்கச் சம்மதம் தெரிவித்தனர். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் என்னை ஊக்கப்படுத்தினர். அவர்களின் ஊக்கம் எனக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது.தொடர்ந்து, கார்ட்டூன் சேனல்களில் வரும் அனிமேஷன் படங்கள் எவ்வாறு கதை உருவாக்கம் செய்யப்படுகிறது. அதில், கதாபாத்திரங்கள் தேர்வு ஆகியவை குறித்து மிகவும் நுட்பமாக கவனிக்கத் தொடங்கினேன். அதனைத் தொடர்ந்து, கதை உருவாக்கத்தில் கவனம் செலுத்தினேன். 2020-2021ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த கதையை உருவாக்கத் தொடங்கினேன். ஆனால் அதற்குமுன் ஆன்லைன் மூலம் அனிமேஷன் திரைக்கதை உருவாக்கத்திற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டேன்.’’ என்றார் அகஸ்தியா.
மேலும் அனிமேஷன் படத்துக்கான பணி துவக்கம், பெயர் சூட்டப்பட்டது குறித்து கூறுகையில், நான் உருவாக்கும் அனிமேஷன் படம் பழங்காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அதற்கு ஏற்றாற்போல் எளிய நடையில், குழந்தைகளுக்கு கேட்டவுடன் பிடிக்கும் வகையில் பெயர் வைக்கவேண்டும், என்று முடிவு செய்தேன். என் தாத்தா, அப்பா கூறும் கதைகளில், குண்டான்சட்டி உள்ளிட்ட பொருட்கள் குறித்து கூறுவது நினைவுக்கு வந்தது. இதையடுத்து நான் தயாரிக்கும் படத்திற்கு குண்டான்சட்டி என்று பெயர் வைத்தேன். எனது கதையில் வரும் முக்கிய கதா பாத்திரங்களான குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் ஆகியோரின் பெயர்களைச் சுருக்கினால் குண்டான் சட்டி என்று வரும். அதையே எனது அனிமேஷன் படத்தின் தலைப்பாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, ஓராண்டு காலமாக நவீன தொழில்நுட்ப வடிவிலான குண்டான்சட்டி அனிமேஷன் திரைக்கதைக்கான படப்பிடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.தற்போது நான் இயக்கிய 2மணிநேரம் முழுநீள குண்டான்சட்டி அனிமேஷன் திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் திரையரங்கிற்குச் சென்று நான் இயக்கிய குண்டான்சட்டி அனிமேஷன் திரைப்படத்தைக் கண்டு ரசித்து எனக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். என் முயற்சிக்கும், சாதனைக்கும் எனது பள்ளி நிர்வாகம் பெரும் ஆதரவு அளித்து வாழ்த்து தெரிவித்தது. மேலும், எனது திறமையைப் பாராட்டி பொதுமக்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களிலும் எனக்குப் பாராட்டு தெரிவித்தனர். எனது அனிமேஷன் படத்தை பார்த்து ரசித்த திரைப் பிரபலங்கள், கவிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என்னைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். எனது படத்தை பார்த்த புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசைசௌந்தர்ராஜன் விருது வழங்கி கௌரவித்தார். அப்போது நான் குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் உருவாக்கியதை வெகுவாக பாராட்டினார். சிறுவயதில் நான் உருவாக்கிய அனிமேஷன் படத்தை பெரும் வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார் பள்ளி மாணவி அகஸ்தி மகிழ்ச்சி கலந்த புன்சிரிப்புடன்.
–ஜவஹர்