சென்னை: ரூ.25 கோடியில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்புத்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம் உள்பட 12 கால்நடை மருந்தக கட்டிடங்கள் மற்றும் சென்னை சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டிடம் என மொத்தம் ரூ.25 கோடியே 15 லட்சம் செலவிலான கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, கால்நடை பராமரிப்பு துறையில் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 208 பேருக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.