கூடலூர்: கூடலூர் அருகே வனத்துறை சுட்டதில் காவலாளி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (55). வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் காவலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், திருநாவுக்கரசு என்ற மகனும் லினோ என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரன் வண்ணாத்திப்பாறை ரிசர்வ் வனப்பகுதிக்குள் வேட்டையாட முயன்றதாகவும், அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த வனத்துறையுடன் ஏற்பட்ட தகராறில் வனத்துறையினர் அவரை சுட்டுக் கொன்றதாகவும் அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கம்பம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஈஸ்வரன் உடல் அங்கு இல்லாததாலும், தேனிக்கு கொண்டு சென்றது குறித்து அவர்களிடம் தகவல் தெரிவிக்காததாலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுக்குமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஈஸ்வரன் உறவினர்கள் கூறுகையில், ‘‘வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்பவரை வேட்டையாடச் சென்றார் என்கின்றனர். சம்பவம் நேற்று (நேற்று முன்தினம்) இரவு 9.00 மணிக்கு நடந்துள்ளது. உயரதிகாரிகள் அனைவரும் வந்து பார்த்து சென்றுள்ளனர். ஆனால், இதுகுறித்து எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் லோயர்கேம்ப் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘‘கூடலூர் வனச்சரக எல்கைக்குட்பட்ட வண்ணாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனவர் திருமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இரு பிரிவுகளாக பிரிந்து ரோந்து சென்றனர். முடநாரி புதுப்பாலம் அருகே வனவிலங்கு வேட்டையாட தரையில் கட்டியிருந்த கம்பியில் மின் இணைப்பு கொடுத்திருந்ததை பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து, வனப்பகுதியில் தேடுதல் நடத்தியபோது அங்கிருந்த குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரனை பிடித்து அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர். அப்போது, ஈஸ்வரன் வனவர் திருமுருகனையும், பென்னியையும் கீழே தள்ளி விட்டு வனப்பகுதிக்குள் ஓடினார். வனத்துறையினர் ஓடிச்சென்று பிடிக்க முயன்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முற்பட்டார். அப்போது வனவர் திருமுருகன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஈஸ்வரனை நோக்கி சுட்டதில், அவர் இறந்து விட்டார்’’ என தெரிவித்துள்ளனர்.